தும்பியாய் பறக்குது உன் நினைவு

கடிகார முள்ளாய் சுற்றுகிறேன் -உன்னை
கடிவாளம் இல்லாமல் பற்றுகிறேன்!
அடிவானம் சாயாமல் நிற்கிறேன் -உந்தன்
மடிமீது தலை சாயப் பார்க்கிறேன்!
நிழலோடு சேராதோ நிறங்கள் -எந்தன்
குழலோடு கேட்காதோ ராகங்கள்!
அலையோடு வாராதோ நீர்க்கோலங்கள்-அவளை
மாலையோடு சேர்க்காதோ வருங்காலங்கள்!
வெந்நீரில் கொதித்தெழும் நீர்க்குமிழி-அவள்
செந்நீரில் செய்கிறாள் பேரமளி!
பன்னீரைத் தெளிக்கிறாள் கனவில்-பின்பு
கண்ணீரைப் பிழிகிறாள் நனவில்!
பிஞ்சினிலே வந்திடுமோ கனிச்சுவை-என்
நெஞ்சினிலே தங்கிடுமோ காதல்சுவை!
அஞ்சிடப் பார்க்குமோ அடங்கா ஆவல்-இன்னும்
கெஞ்சிடக் கேட்குமோ வேறு ஏவல்!
கண்ணிமைகளில் முளைக்குது சிறகு-நினைவில்
விண் தும்பிகளாய் பறக்குது பிறகு!
வண்ணம் குளித்து வந்தது சித்திரம்-அன்பே உன்
எண்ணத்தை வைத்திருப்பேன் பத்திரம்!