என் எழுத்து தள நண்பர்கள் கவிதையாகிறார்கள்….

ஒரு நாளில்
நான் சுமந்து திரியும்
நினைவுகளில்
உங்களில் ஒருவரேனும்
இருந்துவிடுவதுண்டு
இன்றளவும்..!
*******************
ஆடை சேருதல்
தலை வாருதல்
முகம் பூசுதல்களில்
வந்து போகும்
சிறு மின்னலையொத்த
தவிப்புகள்…..
எழுதுதல்
பதிவு செய்தல்
கருத்துகளோடு பயணித்தலிலும்
இருக்கத்தான் செய்கிறது..!
****************************************
முகம் அறிந்த நட்பிற்கு
கொஞ்சமும்
குறைவில்லாது நிற்கிறது
உணர்ச்சிகளாலும்
உணர்வுகளாலும்
இவ் முகமறியா நட்பும்….
**************************************
பிசிராந்தையர்களும்
கோப்பெருஞ்சோழர்களும்
வடக்கில் மட்டுமல்ல
புதுவையிலும்
கோவையிலும்
மிக சமீபத்தில்
மதுரையிலும்
தற்போது சென்னையிலும்
சந்தித்ததை
வரலாறு செய்யலாம்….!
***********************************
காதலை
இருபால் உணர்வு தவிர்த்து…
அன்பு பகிர்தல்
எனவும் ஏற்பின்
இங்குதான்
எண்ணிக்கை கடந்து
காதலிக்கிறேன்…..
**************************
அகம் சேருதல்
புறம் போதல்
உண்டு மகிழ்தல்
பேசிக் கழித்தல்
இரண்டுபடுதல்
முட்டிக் கொள்ளுதல்
வான் மிதத்தல்
வெறுமனே வந்து போதல்
என
இங்கும் தொகுக்கலாம்
அகநானூறும்
புறநானூறும்…!
*********************

எழுதியவர் : ஆண்டன் பெனி (1-Apr-13, 10:35 am)
பார்வை : 180

மேலே