மறுபக்கம்

வீரிட்டு அழுகிறது குழந்தை
பஞ்சு மெத்தையில் அல்ல
அன்னை மடியில் புரண்ட படியுமில்லை
பாதையோரம் பற்றைக்குள்ளிருந்து...

யுத்தத்திற்குப் பின்னரான வசந்தத்தில்
கண்டு பிடிக்கப் பட்டவை என்னவோ
ஏராளம் குந்தி தேவிகளும்
அவர் தம் பாவச் சுமைகளும்தான் ...

''போட்டாளே வேலை அற்று''
அன்றைய புலவன் தன் கற்பனையை
இன்றிருந்தால் நிஜத்தில் கண்டிருப்பான்
பல கவி பாடியிருப்பான்...

என்னைப் போல்தான் சாடுகின்றனர்
அனைவரும் பெண்களை மட்டும்...
மார்தட்டும் சூத்திர தாரிகளின்
மறுபக்கத்தை ஆராயாமல்...

பண்பாடு சீரழிகிறதாம் மங்கையரால்
படித்தவர்களின் குற்றச்சாட்டு இது
ஏன் இவர்களுக்குத் தெரியாதா
அம்பெய்தவன் யாரோ என்று...?

நேற்றுவரை இல்லாத மாற்றம்
போருக்குப் பின்னர் ஏன் ...?
ஊடகங்களின் சிறப்புப் பணியாம்
விருது வழங்கப் படுகிறது...

காய்ந்த மாடுகள் கம்பில் விழும்போது
கம்புகளாய் பெண்களான
கொடுமை யாருக்குத் தெரியும்...?

குழந்தைகளுக்காய் ஏங்குவோர் பலர்
அனாதை இல்லங்கள் பற்பல
குப்பையில் சிசுக்கள் அதனிலும் பல...
இதன் உண்மைத் தார்ப்பரியம்
வெளிவராதது தையலின் துரதிஷ்டம்...

மனித முகத்தின் மறுபக்கம்
திரை விலக்கி அரங்கேற்றப்பட்ட களம்
கதாபாத்திரங்களோடு மறைக்கப் பட்டது
எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை...

முதலெழுத்தில்லாத மகவொன்று
தானாய் வளர்வது சாத்தியமென்றும்
தாயால் வளர்க்கப் படுவது சோதனை
என்றும் எண்ணினாளோ என்னவோ...

பழி சுமக்கும் அப்பாவிகளின்
ஒவ்வொரு கண்ணீர்த் துளிக்கும் பின்னால்
தூக்கம் பிடிக்காத துயர இரவுகளின்
ரணங்கள் நிச்சயமிருக்கும்...

இதுவோர் தற்காலிக தடைதான்
கரையேற முடியாத கடலலைகள்
கரை கடந்துவிட்டால்...?
தயங்கி நிற்கும் பெண்மை
விழித்துக் கொண்டால்...?

கிழிக்கப் படபோவது
கயவர்களின் முகமூடிகள் மட்டுமல்ல
அதன் பின்னால் மறைந்துள்ள
பாவத்தின் மறுபக்கமும்தான்...

குற்றஞ் சாட்டாதீர் யார்மீதும்
பாவப் பட்டவர்களின் நிலையிலிருந்து
சிந்தித்துப் பார்த்தால்
பாவமென்று தெரியாது...
பல வலிகளும் உண்மைகளும் புரியும்.!

எழுதியவர் : அம்மு குட்டி (3-Apr-13, 8:33 am)
பார்வை : 107

மேலே