மெளனக் கனவு

மெளனக் கனவு
------------------------
கனவொன்று
கண்டான் அவன்.

சொல்லவில்லை யாரிடமும்.

அவனுக்குத் தெரியும்.
சொன்னால்,

கேலிப் பார்வைகளும்
நமுட்டுச்சிரிப்புகளும்
வெட்டிக் கனவு என்ற
திட்டுகளும்
பைத்தியக்காரன் என்ற
பட்டங்களும்
ஓடி வந்து
ஒட்டிக் கொள்ளும் என்று.

அவனுக்குத் தெரியும்.
விமரிசனங்களின்
வீரியத்தாலேயே
வளராது போனவர்களின்
வரலாறு.

அவனுக்குத் தெரியும்.
கனவுகள் என்பது
விருட்சங்கள் ஒளிந்திருக்கும்
விதைகள் என்று.

மண்ணில் புதைத்து,
நீரூற்றி,
உரமிட்டு,
மருந்தடித்து,
வேலியிட்டு...

அவனுக்குத் தெரியும்.
விதையிலிருந்து
கனிகள் வரை
எத்தனை சிரமங்க்கள்
இருக்கின்றன என்று.

அவனுக்குத் தெரியும்.
கனவுகள் நனவாக
கடும் உழைப்பு
கட்டாயம்
வேண்டும்மென்று.

அவனுக்குத் தெரியும்.
வியர்வை
வெளியே வராமல்
உயர்வை
அடைய முடியாதென்று.

அவன் கனவு
அலைந்து திரிந்து
கலைந்து போகும்
மேகமல்ல.

படிப்படியாய்
வடிவம் பெறும்
பளிங்குச்சிலை.

அவன் கனவு
நிச்சயமாய் பலிக்கும்.

அவன்
காரியவாதி.
காரியத்தில் கண்வைத்த
வீரியவாதி.

எழுதியவர் : Anbuselvan (8-Apr-13, 1:18 am)
சேர்த்தது : Anbu selvan lotus
பார்வை : 88

மேலே