புத்தாண்டே புதுவரவே ! ( 2ம்பகுதி)

அத்தைமகள் போலே அழகியதோர் தீவெண்ணி
சொத்தை இறைத்துமென்ன சூழ் உலக நாடெல்லாம்
முத்தமிட உறவாட மோகினி போல் காதலுற்று
சித்தம் இழந்தவராய் சுற்றுகிறார் நாடிதனை

சொந்தம் எனத்தீவை தொட்டெடுக்க ஆவலுற்றுச்
சந்தனமே நெஞ்சில் தருகுவையோ ஓரிடமாம்
வந்துனையே காவலிட்டு வண்ணம் சிறப்படைய
தந்திடுவேன் காசுநின தன்னிலோர் பாதிகொடு

உத்தமராம் செந்தமிழர் உனக்கெதிராய் சற்றேனும்
கத்தியெழக் காணின் கவலைவிடு நானுள்ளேன்
செத்துவிட நஞ்செறிந்து சிதைப்பேன் அவர்முழுதும்
கொத்தாய் குலமழிப்பாய் கூடிக்கரம் கொடுப்பேன்

அத்தனை யோர் கேவலமாய் ஆடும் பல நாடுகளும்
குத்தியழித்திருக்க கோலமொன்று நாம்கண்டோம்
செத்தவரோ போயழியச் சுடுகாடு நோக்கி நடை
வைத்தநிலை கொண்டிங்கே வருந்திக் கிடக்கின்றோம்

புத்தாண்டு என்ன புதுவருடம் தானென்ன?
முத்தான மொழிஎல்லாம் ஒப்பாரிக்கா மென்றேன்
”எத்தகைய துன்பமென இவளறிவாள் நானாளும்
புத்தாண்டில் இல்லாமல் போம்” என்றாள் அதுசொல்லி

முடிக்கமுதல் மீண்டும் மங்கையவள் கூக்குரலாய்
துடிக்கும்பெண் அவலம் தொலைவிலே கேட்டிருக்க
”அடித்து வதை செய்யும் ஆட்களுடை கோரமது
வடிக்க குருதி மனம் வழிந்தோட வாழ்கின்றோம்

என்னபிறவி கொண்டோம் இருந்தும் வீரமதைத்
தின்று விழுங்கிவிட்டுத் தெரியாமல் கிடக்கின்றோம்”
என்றுமுடிக்க முன் எழுஞ் சத்தம் வீதியிலே
நின்று நடந்தோடும் நிழலாட்டம் தென்படவே

~வந்துவிட்டான்ஆமி வளைந்து நிலத்தில்படு
எந்தவிதி யுன்னைஇங்கு ஏகிவிடச் செய்ததுதோ
சுந்தரமாய் காணுகிறாய் சுற்றும்பகை கண்ணிடையில்
வந்துவிடில் உந்தன் கதி வாழ்வே அழிந்ததம்மா”

என்றுமெலக் கூறக்கணம் எமைநோக்கி ஒருதடியன்
முன்வாசல் வழிகாண, ”முடிந்தோம் ஓடெ”ன்றேன்
தேனாய் சிரிப்பொன்றைத் திங்களொளித் தங்கைமகள்
தானாய் விரித்தங்கே தமிழ்மகனே அஞ்சாதே

யாரென்று கொண்டாய் ஞாலத்தை ஆளவரும்
போருக்கும் தலைவியாம் பூவுலகின் ஆட்டமெலாம்
நேருக்குநேர் நின்று நிகழ்வெல்லாம் சீராக்கி
பாருக்கு வழிகாட்ட பணிகொண்டு வந்தவளாம்”

சொல்ல அவள் முகத்தை சிறு குழந்தையாய் நோக்கி
”வல்ல மொழிபேசி வந்தாள் உன் முன்னவளும்
வெல்லவந்தேன் என்றாள் விடியுமுன் போகின்றாள்
நல்ல கதைபேச்சு நடப்பதுவோ வேறென்றேன்

”கொல்லும் பகைவரெனும் கோரப்பேய் ஆளுலகில்
நல்லவரின் நீதிவழி நடப்பவர்க்கு வாழ்வுஇல்லை
வல்லவளே உன்னாலே வரும் துன்பம் என்னையும்தான்
இல்லையென ஆக்கிவிடும் இறப்பதிவன் நீயில்லை

( அடுத்ததில் முடியும்)

எழுதியவர் : கிரிகாசன் (16-Apr-13, 2:53 pm)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 58

சிறந்த கவிதைகள்

மேலே