புத்தாண்டே புதுவரவே

புத்தாண்டே புதுவரவே புன்னகைத்து வாராயோ?
புவியாண்டு பலகோடி நன்மைகளைத் தாராயோ?
பத்தோடு ஒன்றாகப் பாவங்கள் தாராமல்
பழிநீங்கி இனம்தளைக்க புதுவாழ்வு தருவாயோ?

நித்தமும் அழுதழுது நெஞ்சோ கனத்ததடி
நீநடந்து நிலமாண்டால் நீதிவழி திறக்காதோ?
புத்தாண்டு மகளே புதுவரவே வந்திங்கு
பொய்யா துறுதியுடன் பேசியெமைக் காவாயோ?

சத்தியமே வந்துவிடு சாகுமினம் பிழைத்துமெழ
நித்தியமாய் புவியிலொரு நேர்மைவழி காணவென
உத்தமி நீ வாராயேல் உண்மைஇறந்ததென
வைத்திடுவேன் தமிழையினி வாழ்வில்கவி வேண்டியதோ?

கூசக் குளிரடிக்க கொள்ளுமெழில் நிலவெறிக்க
தேசத் திருநாட்டில்தென்றல் குளிரெடுத்து
வீசி உடல் சிலிர்க்கும் வேளையிலே ஓரோரம்
வாசித்த கவி எழுதி வைத்தேன் அதன்பின்.....!

****

வீட்டின் வடக்கே வெளிவாசல் திண்ணையிலே
நீட்டிக் கிடந்தேன் நான், நீள பெருங்குரலில்
கூட்டிக் கிணுகிணுத்த கொசுவினிசை சங்கீதம்
வாட்டி உயிரெடுக்க வாராத துயிலேங்கி

தேகம் திருப்ப அத் திசைதனிலே நேரெதிரே
தோகை ஒருத்தியெழில் துள்ளுமிள மயிலழகாள்
மேகக்குளிர் நிலவின் மின்னலிடும் புன்னகையும்
ஆக வடிவெடுத்தே அருகினிலே நின்றிருந்தாள்

கண்கள் பார்த்தவளின் களங்கமிலா முகம்நோக்கி
”பெண்ணே யார்நீயோ பேய்உலவும் நடுச்சாமம்
எண்ணாதொருஇருளில் எழுந்த விதமென்ன
மண்ணில் உன்பாத மழுந்தியதோ ஐய”மென்றேன்

சிரித்தவளாம் சித்திரையோ சித்திரமோ நானறியேன்
பிரித்த இதழிருந்து பிறந்தசங் கீதமெனும்
விரித்த நகைகண்டும் வெள்ளிமலர்க் கால்பார்த்தும்
சரிதான் பேயல்ல தமிழ்மகளோ நீ என்றேன்


பட்டுக்கரு கேசங்கள் பழுத்த நிலவொளியில்
கட்டிகுளிர் வெண்ணையது கசிந்து வழிவதென
திட்டாய் ஒளிமின்னித் தேகம் சிலிர்த்தவளோ
வட்டமுகம் மலர்த்தி வந்தேன்வி ஜயாஎன்றாள்

நேரத்தைப் பார்த்திந்த நட்டநடு நிசிவேளை
கோரத்தை மட்டுமே கொள்ளுமிவ் வூர்நோக்கி
யாரவள் நீ வந்தாய் யாதேது என்றுரைக்க
தூரத்தில் பெண்ணொருத்தி துடித்துக் கதறுமொலி

ஊரை கலக்கியவா றொலித்த விதம்கேட்டு
வீரத்தை நெஞ்சிழந்தோ வந்தஒலி பீதியெழப்
பாரத்தை மனம்கொள்ளப் பண்ணியதோ ஒலிகேட்டு
”யாரங்கே என்னகுரல் ஈதறிவாயோ”என்றாள்

பேசமுன் பேதைகாண் பெருந் துயரம் நடக்குதிங்கே
நீசர் கை கொடுங்கோலில் நேரும்துயர் ஆயிரமாம்
கூசுங் கதை பகிரவெழின் கோடியுகம் ஓடிடுமாம்
வாசலிலே வந்தவளே வாவென்ன வகையறியேன்

மீண்டும் புன்னகைத்து மெல்லியதாய் கண்பார்த்து
”ஆண்டொன்று போயின் அடுத்தவளின் புதுவரவு
நீண்ட புவிமேவி நிலைபெற்று ஆளவென
தாண்டிப் பெருவெளியாம் தகதகக்கும் மின்னலிடை

ஆண்டு விஜயா இவ் வகிலத்தை சேரவந்தேன்
வேண்டியுன் வீடுவர விரும்பாதவன்போலே
நீண்ட கதை படித்தாய் நின்னைநான் என்னென்பேன்”
வேண்டா தவளாயின் விட்டுவிடு எனை யென்றாள்
சொன்னவளைப் பார்த்தேன் சுடரெனும் கண்ணிரண்டும்
மின்னும் ஒளிமுகமும் மெய்யென்று கூற “வொரு
கன்னிதனை கருமிருட்டில் காணப்பயமெழும்பும்
அன்னையென அறியேன் அடியேனை மன்னியென்றேன்

நட்டநடு நிசியாகி நடந்தேகால் பத்தொடு ஈர்
தட்டிமணி ஒலியெழுப்பத் தரணியிலே படர்பவளே
சொட்டுமணித் துளிமுன்னே சுந்தரி என்வீடுவந்து
தட்டியதேன்?” என்னத் ”தமிழ்கவிதை ஏதென்றாள்

”முத்தமிழின் கவிதையெனில் மோகமதில் கொண்டவளே
எத்தனைதான் பேரவலம் இத்தரையில் கண்டுள்ளோம்
உத்தமராம் ஊருலகம் ஒன்றும் கருணையின்றி
செத்தவரை எண்ணுமொரு செயல்கூட மறுத்தனரே
(2 ம் பகுதி பார்க்கவும்)

எழுதியவர் : கிரிகாசன் (16-Apr-13, 2:48 pm)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 66

சிறந்த கவிதைகள்

மேலே