புத்தாண்டே புதுவரவே (மூன்றாம் பகுதி)

வா இன்னும் பார்த்துவிட வழியில் பலதிருக்கும்
போவதற்குஇன்னும் பொழுதுண்டு பன்னிரண்டு
ஆவதுவரைதானும் அழிவுகளைக் கண்டொருக்கால்
பூவான துன்னுள்ளம் புரிந்திடுமோ வா” என்றேன்

கண்டு கொளாதிருள் மறைந்து கையில் உயிர்பிடித்துக்
கொண்டே அவளுடனே குலைநடுங்க ஓடுகிறோம்
தண்டும் தடி இலைகள் தடக்கி யொருசத்தமெழச்
செண்டும் மலர்க்கொடியும் சிதைவடைய ஓடுகீறோம்

எந்ததிசையிருந்து இடிமுழங்கி குண்டுவரும்
வந்து தான்பந்தாட வாரிச் சிரமெடுக்கும்
சிந்தனையில் அச்சமெழச் சேர்ந்தோடக் காலடியில்
அந்தோ என்சொல்வேன் ஐந்தாறு உடல்துடிப்பு

குற்றுயிராய் ஒன்றிருந்து குரல் இன்றிக் கதறுவதும்
மற்றுயிரோ மரணிக்க மயக்கமதைக் கொள்ளுவதும்
அற்று உயிர்போகுங்கால் அலங்கோலமாய் கிடந்த
சுற்றங்களைக் கடந்து சுழன்றே ஒடுகிறோம்

பெருஞ்சீற்ற சத்தமெழப் பேரிடியாய் தடதடென
உருண்டோடும் வண்டியதில் ஒளிவெள்ளம் தவிர்க்கஎன
அருகே ஒருவீட்டை அமைதியிலே ஆழ்ந்துறங்கித்
திறந்தே கிடந்ததனால் தெரியாமல் உள் நுழைந்தோம்

அய்யோஎன் சொல்வேன் அழகியதோர் பெண்மகளாம்
செய்யாத கோரங்கள் செய்தே உயிரழித்தும்
மெய்யில் குருதிவர மேனிச் சிதைத் தழித்து
செய்யும் கொடும் விலங்கோர் செய்தழித்துச் சென்றுவிட

புதுவருடபெண்ணோ பேச்சறியா திகைத்திட்டாள்
இதுவும் பூவிமீதில் இருப்பதுவோ என்பதுபோல்
மதுவிழிகள் நீர்சுரக்க மனது வெறித்தவளாய்
எதுபேச என்றெண்ணா என்முன்னே மொழியிழந்தாள்

பன்னிரண்டு மணியடித்து பாரில் ஒலியெழுப்ப
என்னுடைய நேரமிது ஏங்காதே உலகமதின்
சின்னதொரு வருடம் செயலாற்ற வந்தேனாம்
உந்தன் இனமழியும் உண்மைதனை நானறிந்தேன்

புலரும் புதுவருடம் புத்தாண்டு மட்டுமல்ல
நிலவும் பகைநீங்கி நிம்மதியை தருமாண்டு
பலதும்தீயவைகள் பழிநீங்கி நலம்காக்க
மலரும் வாழ்வுக்காய் மனம்கொண்டுழைத்திடுவேன்

போகும் பிணி தமிழன் புதுவாழ்வு கொள்ளவென
ஆகும் வழி செய்வேன் அஞ்சாதே என்றிட்டாள்
வேகமுடன் அவளோ விழிநோக்கி நான்காண
தேகமெடுத்தவளோ தென்றலிலே கரைந்திட்டாள்

முழுதாய் வியாபித்து மேதினில் பரவியவள்
அழுதவிழி துடைக்க அழியுமினம் காத்திடவே
பொழுதா மிவ்வாண்டடில் போதியன செய்வாளோ
எழுதும் விதியென்று எங்கள்துயர் மறப்பாளோ!

*******************************முடிந்தது)

எழுதியவர் : கிரிகாசன் (16-Apr-13, 2:59 pm)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 65

மேலே