கற்காலம்

மெல்ல நடந்து சென்றேன் - அந்தோ
. மின்னுங்குள அலைமீதிருந்து துள்ளி
. மீன் ஒன்றுவீழ்ந்த தடா
அல்லலுறுதல்கண்டேன் - அதை
. அள்ளியிரு கையில் நீரிலிட்டேனது
. எள்ளி நகைத்ததய்யா
சொல்லத் தெரியவில்லை - அதன்
. சொந்தமனதிடை கொண்டநினைவென்ன
. சொல்லு கயலே என்றேன்
நல்லவன் தானெனிலும் - என்னை
. நாட்டில் விற்றுப்பணம் பெற்றிடுவார் மதி
. யற்ற செயல் உன்னதாம்

வல்லதோர் கானகத்தே - நான்
. வந்தபோதிலொரு வேடன்வலையிடை
. வீழ்ந்த புறாவைக் கண்டேன்
கொல்லென போட்டுவைத்தான்- சிக்கிக்
. கொண்ட புறாவினைக் கையி லெடுத்ததைக்
. காற்றில் பறக்கவிட்டேன்
சொல்லவும் தேவையில்லை - யாரோ
. மெல்லச் சிரித்தென்னை மீண்டும் இகழ்ந்திடும்
. மென்னொலி கேட்டதையா
நல்லதைத் தானே செய்தேன்- இந்த
. நானிலம் மீதினில் தன்னலமற்றவர்
. தாழ்ந்த நிலையினரோ

கல்லை எடுத்தெறிவோர் - அந்த
. காதக வேலையை செய்வரெனில் இந்தக்
. காணுல கஞ்சுமடா
வல்லமன மெடுத்தால் - உந்தன்
. வாழ்வி லுயிர்கொண்டு வாழமுடிந்திடும்
. வைத்த விதி இதுவாம்
சொல்லை எறிந்தவர்க்கும் - மிகு
. சூடெழவே பொய்மை சூழ்ச்சி இழைப்பவர்
. சுந்தர வாழ்வுகொண்டார்
மெல்லெனும் பூவிதழாய் - உந்தன்
. உள்ளம் இருந்திடின் வெய்யில்கூடச் சுடும்
. வேதனை மீதமப்பா

கையில் கிடைத்த உயிர் - தன்னை
. கொன்று சிரிப்பதே காணும் உலகிடை
. கௌரவமாகுதய்யா
செய்யில் கொலைகளெல்லாம் - மக்கள்
. சொல்லின் வரம்பெற்று நல்லவனாய் முடி
. கொண்டபின் செய்தல் நன்றா
வையகமென்ன சொல்லும் - அது
. வல்ல அரசுடை கொள்கை இறைமை யென்
. றுள்ளம் வியந்துகொள்ளும்
மெய்யில் விசர்பிடித்து - அவர்
. மேனிவதைசெய்யும் காமவெறியெனில் 
. மன்னித்து கைவணங்கும்

மன்னர் பகைமை கொண்டால் -அன்றி
. மற்றவர் தேசத்தை கொள்ள விரும்பினும்
. மக்களைக் கொல்வதென்ன?
தன்னை எதிர்த்தவனை விட்டு
. தங்கை அண்ணன் பிள்ளை தம்பி சிறுமிகள்
. தாய்க்குலம் கொல்வதென்ன ?
முன்னேறும் நாகரிகம் - இன்னும்
. மேன்மைகொள் விஞ்ஞானம் அத்தனையும் சில
. மக்களைக் கொல்வதற்கா?
என்ன உலகமிது - தினம்
. இத்தனை சுற்றியும்இன்னும் இருப்பது
. கற்குகைக் காலமன்றோ

எழுதியவர் : கிரிகாசன் (26-Apr-13, 11:16 pm)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 123

மேலே