நித்தமும் தொடர்வேனே
நித்தமும் தொடர்வேனே !
——
நிழலும் நானாகி நித்தமும் தொடர்வேனே
சுழலும் உலகத்தின் சூழ்ச்சிகள் வெல்வேனே
தாமரை மலர்ந்திடவே சூரியன் உதித்திடுமே
பூமகள் நடந்திடவே பாதைகள் சமைப்பேனே !
அன்புடை நெஞ்சங்கள் அனலினில் விழுந்தாலும்
பொன்னென மின்னிடுமே பின்வாங்கிச் செல்லாதே
புன்னகை மாறாமல் போட்டிகள் எதிர்கொள்ளும்
வன்மையும் உன்னாலே வந்ததும் மெய்தானே !
செல்வங்கள் சிதைந்தாலும் சொந்தங்கள் சினந்தாலும்
வல்வினை தொடர்ந்தாலும் வம்புகள் வளர்ந்தாலும்
கல்வியில் கற்றதெலாம் கள்வர்கள் பறித்தாலும் ,
நல்வினை நீயாவாய் நங்கையைப் பிரியேனே !
கடந்த பிறவியிலே கைகூட வில்லையம்மா
நடக்கும் வாழ்வினிலும் வருகின்ற யுகங்களிலும்
அடமோ மடமோ அன்போ வேறெதுவோ
திடமாய் உரைக்கின்றேன் தேவியை விலகேனே !
-யாதுமறியான்.