குருவிக்கூடு

**************
ஒவ்வொரு குச்சியும்
ஒவ்வொரு தூண்
கூடுகட்டும் குருவிக்கு
*
உதிர்ந்து விழுந்த
குச்சிகளின் பெறுமதி
குருவிகளுக்கே தெரியும்
*
ஒரு குடும்பத்தின்
வசந்த மாளிகையை
அலகுகளால் தூக்கும்
குச்சிகளைக் கொண்டே
அமைத்து விடுகின்றன குருவிகள்
*
காற்றோட்டத்திற்கு குறைவில்லாமல்
அதே வேளை கதவு சன்னல்களுக்கு
வாஸ்து பாராமல்
உறுதியும் உத்தரவாதமும் கொண்டு
சொந்த முயற்சியிலேயே
கூடமைக்கும் குருவிகள்
எந்த வங்கியிலும்
கூடமைப்பு லோன் வாங்குவதில்லை
*
குழந்தைகள் பெற்றபின்னும்
வாடகை வீட்டில்
வாழும் பழக்கத்திற்கு
அடிமையாகிப்போன
நம்மைப்போலன்றி
முட்டையிடுமுன்பே
கூடுகளமைத்துக் கொள்கின்றன குருவிகள்
*
எத்தனை குஞ்சுகளானாலும்
அடுக்குமாடிவைத்துக்
கூடுகட்டுவதில்லை குருவிகள்
*
நாளைக்கென சேர்த்துவைக்க
ரகசிய அறைகளோ
பதுங்கு குழிகளோ அமைக்காமல்
பார்த்துக் கொள்கின்றன
*
இரவு முழுக்க
கண்விழித்து தொலைக்காட்சித்
தொடர்கள்,
கைப்பேசிக் குறும்புகள்,
கொண்டாட்டம் கும்மாளம்
என்று இருந்துவிட்டு
அதிகாலைச் சூரியனைத் தரிசிக்காமல் இருந்ததில்லை
இந்த குருவிகள்
*
குடும்பச் சுமையென்று சொல்லி
ஆறுமணிக்குமேல்
மேலதிகமாக உழைக்காமல்
இருட்டுவதற்குள்
கூடடைந்தும் விடுகின்றன குருவிகள்
*
பிள்ளைகளின்
எதிர்காலத்திற்காக
உழைத்துழைத்து ஓடாகி
உருக்குலைந்தவன் வீட்டுக் கூரையில்
தன் குஞ்சுகளுக்கு
இறக்கையை வளர்த்துவிட்டு
வானத்தைக் கையளிக்கும்
குருவிகளின் தன்னம்பிக்கை
ஆறறிவிருக்கும் எமக்கில்லை
*
விவாகரத்தானவர் வீட்டுக் கூரையில்
குடும்பமாய் குதூகலிக்கும்
குருவிக் கூடுகள்
புரிந்துணர்வுகள் கற்றுக்கொடுக்கும்
பள்ளிக்கூடம்
*
நிலம்வாங்கிப் பத்திரம் எழுதி
வீடுகட்ட உரிமம் பெற்று
மேஸ்திரியாரின் இழுப்புக்கு வளைந்து
கொத்தனார்களைக் கூட்டாளியாக்கி ,
கட்டுமானப் பொருள் விற்பனையாளரின் காலைக் கையைப் பிடித்து
நாயாய் அலைந்து
கட்டிய வீட்டில் நிம்மதியில்லாமல்
நாம் வாழ,
யாரிடமும் எந்த அனுமதியும் பெறாமல்
நம் கூரையில் நமக்கு முன்னே
கூடுகட்டி மகிழ்ச்சியாய் வாழும்
குருவிகள்
மகிழ்ச்சி என்பது
பணத்தளவில் இல்லை அவரவர்
மனத்தளவில் என்றே
போதிக்கின்றன
நாம்தான் புத்தனாகாமல் புலம்புகிறோம்
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (4-Jul-24, 1:55 am)
பார்வை : 71

சிறந்த கவிதைகள்

மேலே