இரவுகளை நினைக்காத உறவுகளோடு...
இரவுகளை நினைக்காத உறவுகளோடு...
---------------------------------------------------------------
வணக்கம் - வாழிய நலம்
நலமோடு இருப்பதாய் நம்புகிறேன்.
காரணம் கடவுள் இருப்பதால்
உனது கடிதம் கிடைத்தது.
கடிதம் கண்டு கடலளவு சந்தோஷம் கொண்டேன்
இருப்பினும் கண்ணீரோடு நீ எழுதியிருந்ததை
பார்த்து கலங்கிப்போனேன்.
அன்று இரவெல்லாம்,
நெற்றிப் புருவங்கள் நெளிந்து போகிற
அளவுக்கு உன்னைப்ப்ற்றி சிந்தித்து - சிந்தித்து
சிலையாகிப் போனேன்.
உனது கல்லூரி வாழ்க்கை இந்த மாதத்தோடு
முடிவதை நினைத்தும்,எதிர்கால
வாழ்க்கையின் ஏற்றத்தை நினைத்தும்
கவலை கொண்டிருப்பதை அறிய முடிகிறது.
கலை அறிவோடும்,- காவியச் செறிவோடும்
கந்தர்வ நடையோடும், கனவுகளை
படர்த்தி வைத்திருந்த கல்லூரி வாழ்க்கை
இன்றைக்கு முடிந்து விட்டது என்று
நீமுனங்கினாலும்,அவை
நரைத்துப் போன பிறகும் - நுரைத்துச்சிரிக்கிற
இனிய நினைவுகளாக உன் இதயத்தில் நின்று வாழும்.
என் நெஞ்சில்
நேசத்தை விதைத்திவிட்டுப் போகிற
காவிய மங்கையே!
கன்னி இளம் தங்கையே!
காவிரியின் ஈரமே!
கட்டித் தழுவுகிற காதலியை விட
சமுதாயத்தில் சரிந்து கிடக்கிற
இளைஞர் - இளம் பெண்களை தொட்டுத் தூக்குகிற
தோழர் தோழிகளைத்தான்,
நான் அதிகம் அதிகமாக நேசிக்கிறேன்.
உன்னை நேசிப்பதற்கும்
அடிப்படை இதுதான்.
நெருங்க முடியாமல் - உன்னை
நெருங்கி நேசிக்கிறவன் நான்.
நமது நட்பை இந்த சமூகம்
அங்கீகரிக்காது என்று தெரிந்துதான்
நீ எழுதியிருக்கும் கடிதத்தில்
இது தான் நான் எழுதும்
கடைசி கடிதமென்று எழுதியிருந்தாயோ!
இந்தக் கடிதத்தை,
நீ எங்கிருந்து- எப்பொழுது - எந்தச் சூழ்நிலையில்
படிக்கப் போகிறாயோ என்பதுதான்
எனக்கு இன்னமும் விளங்காமலே இருக்கிறது.
என்றைக்கேனும் ஒரு நாள் இதை படிப்பாய் என்படை
வாழ்நாளெல்லாம் நம்புகிறவன் நான்
உறவும் பிரிவும்
மனித வாழ்க்கையில் மகத்தானவை.
நமக்கு வந்த பிரிவை
இறைவன் கொடுத்ததாக எடுத்துக் கொள்வோம்
எங்கிருந்தாலும் நாம் நண்பர்கள் தான்.
இந்தப் பிரிவின் துயரத்தை நினைத்து
துவண்டாலும்,தளர்ந்து விடாதே.
நீ மெத்த தெரிந்தவள்
மிக்க உணர்ந்தவள்.
உனக்கு அதிகம் சொல்ல வேண்டிய
அவசியமில்லை.இருந்தாலும்,
நட்பின் கடமையை நன்கு உணர்ந்தவனாய்,
சிலவற்றை சொல்ல விரும்புகிறேன்.
உலக சிந்தனை வளத்தையும்
உலக இலக்கிய வளத்தையும்
இளமையிலேயே
கற்றுக் கொள்பவளாகவும்,
இளமையிலேயே ஆழமாக அறிவையும்
செல்வத்தையும் தேடுகிற வேள்வியிலே
வளர்பவளாகவும்,
வித்தியாசமான பெண்ணாக
நீ வரவேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
இன்னும் கொஞ்ச நாளில்
இல்லற வாழ்க்கையில் நுழைந்து விடுவாய்,
வாழ்க்கை யாரோடு வாழ்கிறோம்
என்பதில் அல்ல
எப்படி வாழ்கிறோம் என்பதில்தான்
இங்கே,பல மேனகைகளின்
புன்னகைகள், பொன் நகைகளால்
தகனம் செய்யப்படுவதை
நீ அறிவாய்.
பணத்தால் அல்ல,
மனத்தால் ஒன்று படுகிற மனிதனை
தேர்வு செய்து மணந்து கொள்.
உனது பலம் எது? - பலவீனம் எது?
என்பதை உணர்ந்து கொண்டு
வாழ்க்கையைத் தொடங்கு.
ஒரு நல்ல மனிதனைச் சந்தித்த பிறகு
உன் திருமணத்தைப் பற்றி சிந்தி
இந்த மண்ணில் பொற்காலத்தை
சந்திக்கிற பெண்களில் நீயும்
ஒருத்தியாக இருக்க வெண்டுமென்பதை
எப்போதும் விரும்புகிறேன்.
அடைத்தேனின் சுவையள்ளி
அருங்குணத்தின் கலையள்ளி,
ஒப்பனைக்குள் ஒளிந்து கொள்ளாத
உனது பூ முகத்தையும்
இதயத்தையும்
நினைக்கும் பொழுதெல்லாம்,
என் உள்ளம் குலுங்கும்
உயிலே ஈரம் பொங்கும் - இதயம்
தேன் கூடுகளிலே தொங்கும்.
அதிகாலை பனிபோல் -ஆலய மணிபோல்
என் ஆன்மா அயனவெளியிலே
பயணம் செல்லும்
அலைகள் இல்லாத பசிபிக் பெருங்கடலைப் போல
சலனமே இல்லாமல், என் மனவானில்
சஞ்சரித்துவிட்ட சாயங்கால சந்திரனே!
எனக்குப் பின்னால் நீ வேர்த்துப் போகுமளவுக்கு
வாழ்த்துச் சொல்ல அந்த
வானத்து நட்சத்திரங்களே
உன் வாசலுக்கு வரும்.
இன்னும் எத்தனை தலைமுறை
இடைவெளிக்குப் பிறகு நாம் சந்திக்க
போகிறோமோ? எவ்வளவு அனுபவச்
சுமைகளோடு எந்த திசையில் இருப்போமோ?
என்கிற இறுக்கமான கவலையோடுதான்
என் பயணம் தொடர்கிறது.
நெஞ்சம் நிறைய உனது நினைவுகளைத்தான்
அள்ளியெடுத்துக் கொண்டு போகிறேன்.
என்றைக்கேனும் ஒரு நாள்- நாம் நமது
முகவரிகளைகூட தொலைத்து விடலாம்.
ஆனால், ஒரு நாளும் ஒரு பொழுதும்
நாம் நமது முகங்களைத் தொலைத்துவிட இயலாது.
அரபுக் கூடாரங்களைப் போல் இறுக்கமும் -
ஆலய மெழுகு திரிகளை போன்ற இளக்கமும்-
கொண்ட எனக்கு உனது நட்பில் நனைந்த நாட்கள்
காலம் தாண்டியும் நமது கவனங்களில்
காபூல் திராட்சைகளைப் போல
இனிப்பைக் கொடுக்கும்,
இளமையின் இதிகாசமாய் இருக்கும்.
நட்பில் நனைந்தவளே
காதலை - இலக்கியத்திற்கு விட்டுவிடு
கவலையை - கடவுளிடத்தில் விட்டுவிடு
கல்யாணத்தை - பெற்றொரிடத்தில் விட்டுவிடு
வாழ்க்கை - கோடைகளைத் தாண்டி வசந்தமாக வளரட்டும்.
வாழிய நலம்..!
கன்னத்து முத்தம் - அன்பைக் காட்டும்
உதட்டு முத்தம் - உணர்ச்சியைக் கொட்டும்
நெற்றி முத்தம் - வெற்றியை சுட்டும்.
உனக்கு என் கன்னத்து முத்தம்