உங்களிடம் இல்லையா ?

அவளின் புன்னகை மலர்
உதிராதிருக்க
ஒவ்வொரு முறையும்
அவளிடம் தோற்பதையே
விரும்புவதும்

என்னையும் ஒரு குழந்தையென
நினைப்பவளை
ஏமாற்றிட மனமில்லாமல்
நானும் ஒரு குழந்தையாவதும்

உங்களுக்கு அப்பாற்பட்ட
குணங்கள்.

அவள் பட்டாம்பூச்சியாய்
கைகளில் தவழ வரும்போது
நான் தென்றலாக காத்திருப்பதும்

ஒரு தளிர்போல்
என்மேல் தழுவும் நிலையில்
மறந்தும் முள்ளாக
உரசிடக் கூடாதென
மிகக் கவனமாய் தாங்குவதும்

உங்களுக்கு அப்பாற்பட்ட
உணர்வுகள்.

அவள் வந்துதான்
ஒவ்வொரு காலையிலும்
என் தூக்கம் கலைப்பதான
அவளின் நம்பிக்கை
பொய்த்திடாதிருக்க
என் பாசாங்குத் தூக்கமும்

யாரைப்பிடிக்கும் என்ற கேள்விக்கு
என்னைக் கை காட்டுகையில்
வயது வேறுபாடின்றி
என் பெயர் சொல்வதைக் கேட்டு
நான் மகிழ்வதும்

உங்களுக்கு அப்பாற்பட்ட
ரசனைகள்.

உங்களுக்குள் சிறைப்பட்ட
குழந்தையை
வெளிப்படுத்த விரும்பாமல்
ஒரு பூச்சாண்டியாகவே
உங்களைக் காட்டிக்கொள்ள
முனைவதை அறிந்துதான்

உங்களிடமிருந்து
விலகி ஓடுகிறது
உங்கள் மழலை !

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (9-May-13, 2:43 pm)
பார்வை : 138

மேலே