உயில் எழுதுகிறேன்!

காற்றால்
புரட்டப்படும்
புத்தகப் பக்கங்களின் ஓசை..
அதை என்றுமே காதில்
கேட்டுக் கொண்டிருக்க ஆசை…

புத்தகம் எனது
முதல் மனைவி
என்றுமே புதுமனைவியும் கூட
பொழுது விடிந்தாலும்
புரட்டிக்கொண்டுதான் இருக்கிறேன்,
பக்கங்களை…

எத்தனை முறை
புரட்டினாலும்
அதன் கட்டுக்கோப்பை
கலையவிடுவதில்லை…

படுக்கையிலும்
பக்கத்தில் வைத்துக் கொள்கிறேன்..
பயணத்திலும்
கூட்டிச் செல்கிறேன்…

புத்தகம்
என் எச்சிலுக்கு
ஏங்குகிறது..!
நாக்கின் காம மழையில் -அது
நனைந்துவிடும்…

அதனால்
நாக்குக்கும்
நடு விரலுக்கும்
ஒரு ஒப்பந்தம்…

எச்சிலை எடுத்து
நடுவிரலால்
நாசுக்காக
அதன் இதழ்களுக்கு
இதமாகச் சாயம் பூசுகிறேன்…

புத்தகங்கள் -என்
அந்தப்புரத்து
ஆசை நாயகிகள்…

அவைகளையெல்லாம்
அவைக்கு எடுத்துச் செல்வதில்லை
எல்லோரும் ஆசைப்படுவார்களே
என்ற பயத்தில்…

நானும் தினம்தோறும்
தலைப்புச் செய்திகளை
படிக்கிறேன்
அவையோ
புத்தகப் பெயர்கள்…

புத்தகங்கள்
அறிவைத் தீட்டும்
கொள்ளுப்பட்டறைகள்…

பனை ஓலையில்
எழுதி வைத்தாலும்
படிப்பதற்கு
பைத்தியம் தான்…

காவியங்களை எல்லாம்
கரைத்துக் குடிக்க
ஆசைதான்..
காசு வேண்டுமாமே
புத்தகங்களை வாங்க…

நான்
மூர்ச்சையடைத்து விழுந்தாலும்
முகத்தில் தண்ணீர் தெளிக்காதீர்கள்…,

மூக்கிற்கு முன்
புத்தக வாசனையைக்
காட்டுங்கள்.,
தெளிந்துவிடுவேன்…

பாதாளச் சிறையில் போட்டாலும்
பரவாயில்லை
படிப்பதற்கு
புத்தகம் தாருங்கள்…

என் மரணப் படுக்கையில் கூட
புத்தகங்களை
என் பக்கத்தில் வையுங்கள்…

செத்தாலும்
இடுகாட்டில்
தண்ணீரும் வேண்டாம்.,
கொள்ளிகட்டையும் வேண்டாம்.,
புத்தகங்களை வையுங்கள்….!!!

எழுதியவர் : என். ஜனா (12-May-13, 1:54 pm)
சேர்த்தது : என்.ஜனா
பார்வை : 76

மேலே