யாருக்குச் சொல்வது 'அன்னையர் தின வாழ்த்துக்கள் '...
அன்னையர் தினமா...
சற்று நில்லுங்கள்
யாருக்கு வாழ்த்துச்சொல்ல
வேண்டும் என்று சொல்லுங்கள்....
ஐயிரு திங்கள்
கருவில் சுமந்து
பாலூட்டி சீராட்டி வளர்த்து
அன்பால் அணைந்து
திருமண இணைவு ஏற்படுத்திய பின்னும்
எம் பிள்ளைகளுக்கு வருமா என்று
மனம் நிறைந்து தற்சார்பாய்
தன் பிள்ளைகளை உயர்வாய் கருதி
வீட்டிற்கு வந்த மருமகளை
குத்திக் குதறுவதும் சில பல
தடைகள் விதிப்பதுமாகவும்
மகன் எதிரில் அன்பு கடலாகவும்
மாறி நிற்கும் 'அன்னை 'க்கா...
குழந்தை பெற்றதும் ஏதோ
சுமக்கக் கூடாத
பாவச் சுமையாய் கருதி
பாலூட்ட மறுத்து அடித்து
வதைக்கும் 'அன்னை 'க்கா...
அன்றி குப்பைத் தொட்டியில்
மகவை வீசிச் சென்ற 'அன்னை 'க்கா...
குப்பையில் கிடக்கும் மழலை
உயிரை கண்டும் காணாதது போல்
நமக்கேன் வம்பு..போலீஸ் கேசாகிடும் ...என
தன் பிள்ளைகளைக்
கையில் பிடித்த படி நழுவி
நடந்து செல்லும் 'அன்னை 'க்கா..
அன்றி ...
தன் அடி வயிற்றைத் தடவியபடி
குப்பைத் தொட்டி மழலையை
எட்டிப் பார்த்துவிட்டு
நழுவிச் செல்லும் குழந்தை பேறு
வாய்க்காத பெண்ணுக்கா...!!!
எந்த பெண்ணுக்கும் வாழ்த்துரைக்க
மனமில்லை எனக்கு ...
திருமணம் ஆகியோ ஆகாமலோ
அனாதையாய் தெருவில் நிற்கும்
குழந்தைகளை அன்பாய்
அரவணைத்து பால் புகட்டி
சீராட்டி வளர்க்கும்
குழந்தை பெறும் வரம் இலாத
உன்னத ஆண் மகனுக்கே
அன்னையர் தின வாழ்த்துரைப்பேன்
யார் தடுப்பார் என்னை...
தாயுமாகி நிற்கும்
ஆண்மகனே வாழ்க பல்லாண்டு...
'அன்னையர் தின வாழ்த்துக்கள் '
தாயாகிய ஆடவனே...ஆண்டவனே ...!!!
--- நாகினி