சபிக்கப்பட்ட தோட்டம்
பூப் பூவாய் ஆராய்ந்து
பூந்தோட்டம் ஒன்று அமைத்தேன் .
இனி,
பாவங்கள் பெருகாமலிருக்க
காய் காய்த்து
பழங்கள் பழுப்பதில்லையென்று பூச்செடிகளெல்லாம்
சத்தியம் செய்து கொண்டு விட்டன...
வேலி தாண்டி
பாம்பு ஒன்று நுழைய
பாம்பைத் தொடர்ந்து
நாய் போன்ற நரியும்
நரியைத் துரத்திக்கொண்டு
ஓநாயும் புலியும்
ஒவ்வொன்றாய் அத்து மீற
பூக்களால் நிறைந்த என் தோட்டம்
விலங்குகளின் கூடாரமானது.......
சத்தமும் ரத்தமும்
கானமும் காட்சியுமானது ....
பூக்களின் அருகிலேயே
தேனீக்கள் முகாமிட்டுவிட்டன...
பூக்களை நெருங்கினாலே
தேனீக்கள் கொட்டுகின்றன ....
பூக்களின் வாசனையைக் கூட
ரத்த வாசனை கொன்று விடுகின்றன ...
விலங்குகளைக் கொன்று விடலாம் தான் !
காலம் கனிந்திருக்கிறது
சத்தியத்தை மீறி
செடிகள் காய்க்கத் தொடங்கி விட்டன !