மரம்...!!!
குளத்தில் விழுந்த
மரத்தின் பிம்பம்
குளத்தை மரமாக்கியது.
அவ்வப்போது கிளைகளை
உடைத்துக் கொண்டு
செல்கிறது பாம்பு.
தன்னடியில் நிற்போரின் நிழலை
தனதாக்கிக் கொள்கிறது மரம்.
மரத்தை குடிப்பவன்
தன்னுள் வளர்த்துக் கொள்கிறான்
வம்சத்தின் ஞானக் கிளைகளை.
இன்றும் அப்படியே
இருக்கிறது விதையினுள்
உறங்கிக் கொண்டிருக்கும் அந்த மரம்.
ஒரு துளி விழ
மரம் அதிர்ந்து அமைதியாகிறது.
மரத்தில் அமர்ந்த குருவி
மூழ்கி பின் எழுகிறது
மரத்தை அசைத்துவிட்டு.
காற்றை அசைத்துக் கொண்டிருக்குது
அந்த கிழட்டு மரம்,
கிளைகளை ஆட்டிய படி.
நேற்றிரவு ஆடை களைந்தவள்
இன்று மரத்தின் மேல்
அமர்ந்து குளிக்கிறாள்.
மரத்தை குடித்த நாய்
அடுத்த நாள் இறந்து போனது
மர்மமான முறையில்.
ஒரு நாள் திடீரென
காணாமல் போனது
அந்த குளமும் மரமும்.
குளத்தில் விழாத கல் மரம்
இன்று குளத்தின் மேல் நிற்கிறது
மனிதக் கிளைகளை தாங்கியபடி.
வம்சக் கிளைகளை
வாசற்படியில் தேடுகிறான்
வயதான பேரன்,
தன் கிளைகளை உடைத்தபடி.