இப்படிக்கு நிலமகள்

கலைமகள் அருளிய
கவிதை வடிவில்
நிலமகள் எந்தன்
நிலைமை சொல்வேன்!

கலங்கும் எனது
கண்கள் துடைக்க - உங்கள்
கரங்கள் நீண்டால்
மகிழ்ச்சி கொள்வேன்!

ஆலைக் கழிவுகள்
அனைத்தும் இறக்கி
பாலை நிலமாய் எமைப்
பயனற்று ஆக்கி - நாளை
ஆழ்துளைக் கிணற்றில்
அமிலம் சுரக்கையில்
ஐயோ என்று
அலறுதல் முறையோ!

நீலக்கடல்நீர்
சுவையைப் போல
நிலத்தடி நீரும்
மாறிப்போன
காரணம் எதுவென
என்னைக் கேட்டால்
நான் கதறி வடிக்கும்
கண்ணீர் என்பேன்!

ஒவ்வொரு மரத்தை
வெட்டும்போதும்
ஒவ்வொன்றாய் என்
வாழ்நாள் குறையும்!

ஒவ்வொரு செடியை
விதைக்கும்போதும்
ஒவ்வொன்றாய் என்
பிணிகள் மறையும்!

பாலும் தேனுமா நான்
பருகக் கேட்கிறேன்?
பாலிதீன்தான்
வேண்டாம் என்கிறேன்!

பாவிகள் உங்கள்
பாரம் சுமந்தும்
பதிலுக்கு உங்களால்
நஞ்சைத் தின்கிறேன்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (16-May-13, 12:36 pm)
பார்வை : 200

மேலே