சாகுமென் ஜீவிதம்! (ரோஷான் ஏ.ஜிப்ரி)
சில கணம்
பூச்சொரியும் ஆச்செரியங்களால்
மூழ்கடித்து விடுகின்றாய்
பல தினம்
பூகம்பமாய் வெடித்து-உயிர்பிழிந்து
நோகடித்து நகர்கின்றாய்
எப்படி உன்னால் மட்டும்
நிறைய முகங்களோடும்
நிறைந்த மோகங்களோடும்
வாழ்க்கையை எழிதாய்
தரம்பிரிக்க முடிகிறதோ அறியேன்?
கால்கொலுசின் அசைவுகளில்
நீ ரசித்துக்கொண்டிருப்பது
என் சந்தோசங்களின் இசையென்பது
உன் மகுடி நாதம்.
நிற்க:
உச்சிப் பொழுதின்
வெம் மணலில்
நகர முடியாமல் தவிக்கும்
ஜீவனொன்றின் கடைசி பாடலது...
எப்பொழுதும்
என் நினைவுகளின் கல்லறைகளில்
நீதான் சமாதியாகி
சஞ்சரிக்கின்றாய்
அதே நொடி கனவுகளில்
ஆவியாகி ஆட்பரிக்கின்றாய்
இன்றைய நாளிலும்
விடியல்களற்ற அஷ்த்தமனத்தின்
பக்கங்களில்....,
மௌனத்தை அருந்தி
விதியை தின்று தொலைத்தபடி
வயிறு முட்டி சாகுமென் ஜீவிதம்!
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

