"விழுதுகளை விழுங்கும் வேர்கள்"
அன்னையின் அலறல்...! கூடவே
மழலையின் முதல் அழுகை ஆரம்பம்
சுற்றமும் சூழ வந்து விசாரித்தது
என்ன குழந்தையென்று...?
பிரசவம் பார்த்திட்ட செவிலி சொன்னாள்
பெண் குழந்தையென்று.......
கேட்டதும்
சுருங்கிப் போயிற்று
சுற்றி நின்றவர் முகங்கள்
பெற்றவள் உட்பட .....
அடுத்த சில மணிகளில்
அம்மழலை எருக்கம் பாலில் எமனைக் கண்டது ....ஆம்
அக்குழந்தை மரணித்தது ....
இவ்வாறு
பெற்ற குழந்தையைப் பெண்ணென்பதால்
பலியிடத் துணிந்திட்ட அந்தப் பெற்றவள்
மற்றும் அவள் போன்றோர் இங்கு
விழுதுகளை விழுங்கும் வேர்கள்....
இவ்வேர்கள் உணரவில்லை
தாங்கள் விழுங்குவது விழுதுகளை அல்ல
தம்போன்ற வேர்களையே என்று
கொடுங்குற்றம் தனைப் புரியும் இவர்கட்கு
இனியேனும்
விளங்கட்டும் இதுவே உண்மை என்று .....