துணிவே துணை
துணிவே துணை
---------------------------
நிகழ்காலம் என்ற இந்த நிமிடத்தில் தான்
எதிர்காலத்தின் வெற்றி எழுதப்படுகிறது.நம்மிடம்
ஒளிந்திருக்கும் தன்னம்பிக்கையும் துணிச்சலும் ஒரு
சிறிய விதைக்குள் ஒளிந்திருக்கும் மிகப்பெரிய
விருட்சத்தைப் போன்றது.
''இயற்கை இருந்தால் மட்டும் போதாது;பறக்க
வேண்டும் என்றசிரத்தை இருந்தால் தான்
பறக்க முடியும்.இப்படியே ஒவ்வொரு
செயலுக்கும் சிரத்தையுடன் கூடிய முயற்சி தேவை.
செய்ய வேண்டும் என்ற உறுதியும் சிரத்தையும்
இருந்தால் தான் எதையும்சாதிக்க முடியும்''
தன்னம்பிக்கையும் துணிச்சலும் இரட்டைப்
பிறவிகள்;தன்னம்பிக்கை இருக்கும் இடத்தில் தான்
துணிச்சல் இருக்கும்.துணிச்சல் இருக்கும் இடத்தில்
தான் தன்னப்பிக்கையும் இருக்கும்.
இந்த இரண்டு குணங்களுமே மனித
இனத்திற்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷங்கள்.
தயங்குவதும்,பின்வாங்குவதும்,சோர்ந்து
போவதும் ஆர்வம் குறைதலும்,முடியுமா!
என்றஐயமும்,முடிவெடுக்க முடியாத நிலையும்,
தன்னம்பிக்கையின்மை மற்றும் துணிவின்மையின்
வெளிப்பாடுகள்.
திட்டமிடல்,விடாமுயற்சி,கடின உழைப்பு,
துணிச்சல்,தன்னம்பிக்கை ஆகிய இந்தப்படிகளில்
ஏறித்தான் சாதனையாளர்கள் உச்சத்தைத் தொட்டு
உள்ளார்கள்.
ஒருநாள் ஒரு விவசாயி இருட்டில் காட்டுப்
பாதையைக் கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இவர் இருட்டில் காட்டுப் பாதையைக் கடக்க
பயந்து நின்றபோது காட்டிலிருந்து ஞானி ஒருவர்,
விவசாயிக்கு பாதையில் நடக்க உதவிக்கு ஒரு
விளக்கை கொடுத்தார். இங்கிருந்து பக்கத்துக்
கிராமம் செல்ல எத்தனை மைல் தூரம் போக
வேண்டும் என்று கேட்டான் விவசாயி. பத்து மைல்
தூரம் என்று பதில் சொன்னான் ஞானி.
பத்து மைல் போக வேண்டும்
என்கிறார்களே,இந்த விளக்கு பத்தடிக்குக் கூட
பாதையைக் காட்டாதே என்று புலம்பினான்
விவசாயி. புறப்பட்டுப் போ உனக்கு எல்லாம்
புரியும் என்றார் ஞானி.
முதல் பத்தடி தாண்டிய பிறகு அதேவிளக்கு,
அடித்த பத்தடிக்கும் வெளிச்சத்தைத் தந்தது.
இப்படியே அடித்தடுத்து பத்து மைலுக்கு அந்த
விளக்கு வெளிச்சத்தை தரும் என்ற உண்மையை
உணர்ந்து கொண்டான் விவசாயி.
அதைப்போலவே மிகப்பெரிய பயணம் கூட ஒரு
சிறு அடியில் தான் தொடங்குகிறது,மிகப்பெரிய
பிரச்சனைகளும் கூட தீர்வு மிகச்சிறியதாக்
இருக்கும். பிரச்சனை என்ற கருப்பைக்குள் தீர்வு
என்னும் குழந்தை இருக்கிறது என்ற உண்மையைக்
கணடு கொள்ளும் சாமர்த்ததியம் தான் வெற்றி
பெறும் மனிதர்களின் சூட்சமம்.
அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ்,
அமெரிக்காவைக் கண்டுபிடிக்க வேண்டும்
என்ற நோக்கில் போகவில்லை.மேற்கே நிலப்பரப்பு
ஒன்று உண்டு என்ற நம்பிக்கையும் அதைக்
கண்டறிய வேண்டும் என்ற உந்துதலும் தான் வெற்றி
முயற்சிக்கு அவரைத் தூண்டியது.
பல முயற்சிகளுக்குப் பின்பு அந்நாட்டு அரசர்
கொடுத்த கப்பலில் பதினைந்து மாலுமிகளோடு
மேற்கு நோக்கி கடற்பயணம் தொடங்கினார்.
துணிச்சலான இந்த முயற்சியால் காற்றும் ,கடும்
மழையும்.புயலும்,பல அபாயங்களும் இவருக்குப்
பல ஆபத்துக்களைத் தந்தது.பதினைந்து
பேருக்குமான முப்பது நாட்களுக்குரிய உணவும்
குடிநீரும் மட்டுமே கப்பலில் இருந்தன. இதில் முதல்
பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. எந்த
நிலப்பரப்பும் தென்படவில்லை.நாடு திரும்ப
வேண்டுமென்றால் மீண்டும் பதினைந்து நாட்கள்
ஆகும்.உணவும்,குடிநீரும் திரும்பும் பதினைந்து
நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது.
உடன் வந்த பதினைந்து மாலுமிகளும்
தைரியத்தையும்,தன்னம்பிக்கையையும் இழந்தனர்.
பயணத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்ப
வேண்டுமென்று வற்புறுத்தினர்.கொலம்பஸ்
அவர்களோடு வாதிட்டுப் பார்த்தார்.உடன்
வந்தோர் உயிரோடு ஊர் திரும்புவதே முக்கியம்
என்பதில் உறுதியாக இருந்தனர்.
கொலம்பஸ் துணிச்சலோடு ஒரு முடிவிற்கு
வந்தார்.எனக்காக மேலும் ஒரு நாள் பயணத்தைத்
தொடர்வோம் எந்த நிலப்பரப்பும்
தெரியாவிட்டால் என்னை மட்டும் கடலில் தூக்கி
எறிந்துவிட்டு நீங்கள் பதினைந்து பேரும் ஊர்
திரும்பிவிடுங்கள்.உங்களுக்கான பதினாங்கு
நாட்களுக்கான உணவும் குடிநீரும் இருப்பில்
இருக்கும் என வேண்டினார்.உடன் வந்தோர்
இதற்கு ஒப்புக்கொண்டனர்.
மறு நாள் காலை விடிந்த போது நிலப்பரப்பு
தெரிந்தது. பின்பு தான் அது அமெரிக்க நாடு எனக்
கண்டறிந்தார்.அபாயத்தை எதிர்கொள்ளும் என்ற
வெறியும்.தன்னம்பிக்கையும் இல்லாமல்
இருந்தால் கொலம்பஸ் உலக வரலாற்றில்
இடம் பெற்றிருக்க வழியில்லை.
சாதனைகளை தவறவிடுபவர்கள்
சாதாரணமானவர்கள் பாதகங்களைச்
சாதகங்களாக மாற்றி வரலாற்றில் தன் பெயரைப்
பதிப்பவர்கள் சாதனையாளர்கள்.துணிச்சலும்
தன்னம்பிக்கையும் இருந்தால் சாதனைக்கான கதவு
தானாகவே திறக்கும்........