வழியற்றவனின் சொற்கள்....

ஒரு....

கொடும் சவப்பெட்டியின்
முகம் என முளைத்திருக்கும்
இந்தத் தீவில்....

வழியற்றவனின் சொற்கள்...
சிதறிக் கிடக்கின்றன...
இறைக்கப்பட்ட பூக்கள் என
அதன் வீதிகளெங்கும்.

எவராலும்...
கவனிக்கப்படாத...
சில தலைமுறைகளின் எதிர்காலம்...

குருதியின் மணம் நுகர்ந்தபடி...
அலைந்து கொண்டிருந்தது...
முட் கம்பிகளுக்குள்.

நிலவுகள் பிய்த்தெறியப்பட்ட...
இருளின் கரங்களில்...

வாய் பிளந்திருந்த புதை குழிகளுக்குள்
கனவுகள் புதைந்து கொண்டிருக்க...

யாருமற்று விடப்பட்ட
மானுடம் நோக்கி நீண்டிருந்தது...
அவர்களின் புதிய கொலை ஆயுதம்.

எவராலும் வேண்டப்படாத குப்பையாய்
எங்களின் வாழ்க்கை...
இந்தத் தீவினில் சேகரமாகிக் கொண்டிருக்க

தொலைந்து போன காலங்கள்...
எதிரொலித்துக் கொண்டிருக்கிறது....

உங்கள் காதுகளிலும் ...
காதுகளை இழந்த கடவுளர்களின்
தலை தெறித்த நிலங்களிலும்....
எமது ஒப்பாரிப் பாடல்களை.

ஒரு பெரும் பாவமென ...
நிராகரிக்கப்பட்டு விட்ட
எம் உள்ளத்தின் வலிகள்...

எவராலும் உணரப்படாமலே போய்விட....
கணக்கெடுப்புகளால் ...
தம்மை திருப்தி செய்துகொண்டுவிட்ட
எம் தீவற்ற சகோதரர்கள்

திரும்பிவிட்டனர் வழமை வாழ்விற்குள்...
செய்திதாள்களில் தெறிக்கும்
எங்களின் வாழ்வின் வலியை முணுமுணுத்தபடி.

எழுதியவர் : rameshalam (24-May-13, 3:57 pm)
பார்வை : 107

மேலே