குறுஞ்செய்தி

என்ன கதை எழுதலாம் என பல்வேறு விதமாய் யோசித்தும் சரியான களம் கிடைக்காமல் தடுமாறிக்கொண்டிருந்தான் கணினி முன் அமர்ந்தபடி வளர்ந்து வரும் அந்த எழுத்தாளன். சிறு சிறு வாக்கியங்கள் தட்டச்சு செய்வதுமாய் பின் சரியாய் வராமல் அழிப்பதுமாய் காலை வேளை அவனை மிகவும் இம்சித்துகொண்டிருந்தது.

“டிங் டிங்” அவனது கைபேசி குறுஞ்செய்தி ஒன்றை சுமந்து வந்ததிற்கு அறிகுறியாய் அழைப்பு விடுத்தது.

“என்ன இன்னிக்கு சார் ரொம்ப யோசிக்கிற மாத்ரி தெரியுது” வெளியே தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிகொண்டிருந்த அவனது மனைவி அவன் நிலையை ஜன்னல் வழியே கண்டு அந்த செய்தியை அனுப்பியிருந்தாள். சிறு புன்னகை அவன் அறியாமல் அவன் உதட்டை விரிக்க அவளை ஜன்னல் வழியே பார்த்தான். சடாரென களம் ஒன்று காட்சிகளுடன் அவன் கண்முன் தோன்றியது.

இதை எப்படி இவ்வளவு நாள் எழுதாமல் விட்டிருந்தேன். ஏதேதோ கதை சொல்லியவன் என்னுள் இருந்த சொந்த கதையினை அழகான கவிதையினை ஏன் எழுததவறினேன் என்ற எண்ணங்களை ஓட விட்டபடியே கதையின் தலைப்பை எழுதினான் “குறுஞ்செய்தி”.

கல்லூரி இறுதி ஆண்டின் தொடக்கத்தில் ஏதோ ஒரு சூழ்நிலையில் இருவருக்கும் பூத்த காதல் முழுதாய் புரிந்தது அவள் ப்ராஜெக்ட் சம்பந்தமாய் சென்னை போன அந்த ஒரு மாத காலத்தில். கிண்டலும் கேலியுமாய் வளர்ந்த எங்கள் நட்புக்குள் காதல் வந்து சிம்மாசனமிட்ட தருணம் புரியாமல் தான் இருந்தோம் அந்த பிரிவு வரும் வரை.

சிறு நாட்களின் அவளது பிரிவு எனக்கு வெறுமையை கொடுத்தது. அவளோ சென்னையில் நானோ கோவில்பட்டியில். கல்லூரி செல்லவே பிடிக்காமல் போன அந்த நாட்கள் நத்தை போல ஊர்ந்தது. என் கண்கள் எப்போதும் காலியாய் இருந்த அவள் இருக்கையை பார்த்தபடி ஏங்கியது. எப்போது அந்த இருக்கையும் என் கண்களும் நிறையும் என்ற எதிர்பார்ப்பு அவள் சென்னை போன ஒரு வாரத்திலேயே என்னை முழுதாய் ஆக்ரமித்தது.

கண்கள் வளைய அவள் பேசும் அழகும் தேத்துப்பல் தெறிக்கும் சிரிப்பும் நாக்கை சின்னதாய் வெளியே நீட்டி கடித்து செய்யும் கண்டிப்பும் பின்னம் வரை நீண்ட கூந்தலும் இல்லாமல் நான் பட்ட அவஸ்தை என்னுள் நன்றாய் புரிய வைத்தது இது காதல் தான் என்று.

எனது ஏக்கத்திற்கு வடிகாலாய் அப்போது இருந்தது கைபேசி மட்டுமே. வகுப்பு நேரம் உட்பட அணைத்து நேரங்களையும் அவளுடனே கைபேசியில் கழித்தேன்.

அப்போதிருந்த ஒரு நாளைக்கு நூறு குறுஞ்செய்திகள் இலவசம் என்ற வசதி எங்களுக்கு மதியம் வரை தான் உதவியது. இருந்தும் பரிமாறினோம் செலவுகளை கணக்கில் கொள்ளாமல். இருந்தும் அவளிடம் கிண்டலும் கேலியுமாய் நகர்த்த உதவிய அலைபேசியில் எனது ஏக்கங்களை வெளிப்படுத்த ஏனோ தயக்கம் என்னுள் நட்பிற்கு பங்கம் விளையுமோ என்று.

“ஐ மிஸ் யு… உன்ன பாக்கணும் போல இருக்கு….” இந்த குறுஞ்செய்தியை எத்தனை முறை தட்டச்சு செய்து அவளுக்கு அனுப்ப தைரியம் இல்லாமல் அழித்திருப்பேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். அவளும் என்னை போன்றே அவதிப்பட்டு கொண்டிருப்பாளோ என்ற யோசனை அவ்வப்போது என்னுள் எழுந்து சந்தோஷம் கொடுத்தாலும் அப்படியெல்லாம் இருக்காது என்ற பயமும் கொடுத்தது.

“குட்மார்னிங் டா செல்லம்” படுக்கையில் இருந்து எழுந்த எனக்கு அன்றைய குறுஞ்செய்தி குறுகுறுப்பை கொடுத்தது. காரணம் செல்லம் என்ற அந்த ஒற்றை வார்த்தை. என்றும் அவளிடம் இருந்து வராத வார்த்தை. தலை கால் புரியாமல் பதில் என்ன சொல்ல என்று அறியாமல் வழக்கமாய் சொல்லும் காலை வணக்கம் கூட சொல்லாமல் கல்லூரிக்கு கிளம்ப ஆயத்தமானேன்.

“என்ன டா பண்ணிட்ருக்க…. ரிப்ளைய காணோம்..” கல்லூரிக்கு செல்லும் பேருந்தின் ஜன்னலோரத்தில் அமர்ந்து அவளுக்கு என்ன பதில் அனுப்புவது என்று யோசித்துக்கொண்டே பயணப்படும் நேரம் அவளிடம் இருந்து வந்த இரண்டாம் செய்தி இது.

அவள் என்முன்னே அமர்ந்தது போன்ற பிரம்மை ஏற்பட்டது. அவள் முகத்தில் சின்ன பொய் கோபம் தெரிந்தது என் பதில் இல்லாமல்.

“காலேஜ் போய்டு இருக்கேன் டி… ஆமா என்ன புதுசா செல்லம் எல்லாம்…” இம்முறை பதில் அளித்தேன் கேள்வியுடன் கொஞ்சம் தைரியத்தை வளர்த்துக்கொண்டு.

“ஏன் நான் கூப்ட கூடாதா….” அவள் புருவம் உயர்ந்தது என்முன்னே

“அப்டில்லாம் இல்ல தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்….”

“இல்ல சும்மா தான்… கூப்டனும்னு தோனுச்சு….வேணாம்னா சொல்லு கூப்டல….” அவள் முகம் வடிய மலராய் தெரிந்தது இப்போது.

“வேண்டாம்னு சொல்ல நான் என்ன முட்டாளா…” இதை படித்தவளுக்கு அவளறியாமல் அவள் உதட்டில் புன்னகை பூத்திருக்கும். ஏனெனில் என்முன்னே இருந்த அவள் உருவம் புன்னகை உதிர்த்ததே.

“சரி டா…. சாப்டியா குட்டிமா…” அடுத்த வார்த்தை என்னை காற்றில் மிதக்க செய்தது. சிறு சிறு கொஞ்சல் வார்த்தைகள் என்னை திக்குமுக்காட செய்தது.

“முடியல டி என்னால… நீ தான் மெசேஜ் பண்றியா….”

“போ டா…” சிணுங்கலாய் வந்த குறுஞ்செய்தி என்னை சில்லு சில்லாய் சிதறடித்தது.

“ஏன் டி குட்டிமா….” நானும் கொஞ்சும் வார்த்தை உதிர்த்தேன் முதன்முறையாய் அவளுக்கு குட்டிமா என்ற வார்த்தையை கைபேசியில் தட்டிய போது இருந்த சந்தோஷமும் படபடப்பும் கண்டிப்பாய் அவளுக்கும் ஏற்பட்டிருக்கும். ஆனால் என்னுள் இருந்த அளவிற்கு கண்டிப்பாய் இராது.

திடீர் என்று இவளுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் அடுத்து வந்த நாட்களில் எங்களுக்குள் இறுக்கத்தை கூட்டியது. கொஞ்சல் வார்த்தைகள் நாட்களை அழகாய் நகர்த்தியது. இப்போதெல்லாம் அவளை நான் தேடுவதில்லை அவள் உருவம் தான் அவள் குறுஞ்செய்தியுடன் என்முன்னே வந்து விடுகிறதே. அவள் நிழல் முகம் கண்டதிலேயே இவ்வளவு ஆனந்தம் என்றால் அவள் நிஜ உருவம் பார்க்கும் தினம் அப்பப்பா நினைக்கும்போது பேரானந்தம் என்னுள்.

“ஏதோ மிஸ் பண்ண மாத்ரி ஒரு பீலிங் டா…. உன்ன பாக்கணும் போல இருக்கு டா…” பின்னொரு நாளில் அவள் அனுப்பிய குறுஞ்செய்தி அவளுக்கும் காதல் உண்டென்பதை உறுதி செய்தது.

“எனக்கும் தான் டி… எப்போ வர்ற நீ…” நானும் கூறினேன் அவளை போலே.

“இன்னும் டூ வீக்ஸ் டா… எப்படா முடியும்னு இருக்கு….” அவள் முகத்தில் என்னை காணாமல் தவிக்கும் தவிப்பை பார்த்தேன் அன்று. நிழல் உருவம் நிஜமாக இன்னும் இரண்டு வாரங்கள் காக்க வேண்டும் என்று உணர செய்தாள்.

இரண்டு வாரங்கள் கவிதையாய் கரைந்தது என் வாழ்வில். எங்களது குறுஞ்செய்திகள் அணிவகுப்பு இரவுபகல் பாராமல் தொடர்ந்தது. இரவில் தூக்கத்தை விட ஏக்கங்கள் நிறைந்திருந்தது. கண்கள் மூடாமல் கைபேசியில் சிறைபட்டது. அவளிடம் இருந்து பதில் வர சிறு நாழிகை தவறினாலும் மனம் தவிப்பாய் தவித்தது. வலிந்து வந்த காதலை இரண்டு வாரங்கள் அடக்கி வைக்க முடியும் என்ற நம்பிக்கை தகர்ந்தது.

நான் உன்னை காதலிக்கிறேன் அல்லது ஐ லவ் யூ இப்படி சின்ன வார்த்தைகளில் முடித்துவிட மனமில்லை எனக்கு. என்றும் அழியாமல் அதுவும் எங்களுக்குள் இருந்த காதலை விளங்க செய்த இந்த குறுஞ்செய்தியிலேயே சொல்ல வேண்டும் ஆனால் எப்படி புரியவில்லை. காதல் சொல்ல நான் பட்ட தடுமாற்றம் அவளுக்குள்ளும் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதை சொல்ல வந்து முடியாமல் தவித்த அவளது மனம் கண்ணாடியாய் அவள் குறுஞ்செய்தியில் தெரிந்தது.

“என்ன டி எப்போ கெளம்பற….” அவள் வர இன்னும் மூன்று நாட்களே மீதம் இருந்த நேரத்தில் இந்த கேள்வியை தொடுத்தேன்.

“நாளகழிச்சு நைட் பியர்ல் சிட்டி எக்ஸ்பிரஸ்ல டா….”

“ஓகே டி… வெய்டிங் போர் யூ மேட்லி….”

“இங்கயும் அதே தான் டா….”

“மிஸ் யூ குட்டிமா”

அவள் வர இன்னும் மூன்று நாட்களே இருந்த நிலையில் எனக்குள் அவசரம் தொற்றிக்கொண்டது. அவளை நான் பார்க்கும் நேரம் அவள் என் காதலியாக நான் அவள் காதலனாக இருக்க வேண்டும் அவள் என் கண்கள் காணும்போது அதில் காதல் இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் அவளுக்கு கண்டிப்பாய் இருக்ககூடாது என்று எண்ணியதால் எந்த சின்ன வார்த்தையில் முடிக்கவேண்டாம் என்று நினைத்தேனோ அதையே அனுப்ப முடிவு செய்தேன்.

காதல் சொல்ல நல்ல நேரம் நாளை இரவு எட்டு என்று முடிவு செய்தேன் முருகன் படம் போட்ட காலேண்டர் அட்டையின் பின்னில் பார்த்து. குறுஞ்செய்தி பரிமாற்றங்களுடன் அடுத்த நாள் இரவின் எட்டு மணிக்கு இப்போதிருந்தே தயார் ஆனேன். அடுத்த நாளும் வந்தது இரவும் வந்தது.

“ஒரு சின்ன வொர்க் இருக்கு…. ஓனே ஹவர் கழிச்சு மெசேஜ் பண்றேன்….” மணி ஏழு ஆகும்போது இந்த குறுஞ் செய்தி அனுப்பினேன். காதல் சொல்வதற்கு முன்பு ஒரு சிறு இடைவெளி இருந்தால் நன்றாய் இருக்கும் என நான் நினைத்த காரணத்தால்.

ஒரு மணி நேரம் நத்தையாய் நகர்ந்தது. அந்நேரம் நான் சென்றுகொண்டிருந்த பேருந்து கூட கம்பளிபூச்சி போல் மெதுவாய் ஊர்வதாய் ஒரு பிரம்மை. அவளது பழைய குறுஞ்செய்திகளை படித்துக்கொண்டே நேரம் நகர்த்தினேன். நான் பேருந்தில் இருந்து இறங்கவும் நேரம் எட்டை தொடவும் சரியாய் இருந்தது. வாகன இரைச்சலுக்கு நடுவே பேருந்து நிறுத்தத்தின் ஒரு மூலையில் நின்றுகொண்டு என் காதலை தெரிவிக்க கைபேசி தட்டச்சு செய்ய ஆயத்தமானேன். அதற்குள் அவளது குறுஞ்செய்தி வவந்தது.

“நான் ஒருவனை காதலிக்கிறேன். அதை சாதகமாக்கி கொண்டு என் இதயம் திருடியவன் அவன் இதயத்தின் வலப்பக்கம் வைத்துக்கொண்டு தரமறுக்கிறான். அவன் கண்கள் காண்பிக்காமல் கண்ணாமூச்சி ஆடி இம்சை செய்கிறான். எனக்காக அவனை விரைவாய் கண்டுபிடித்து தண்டிப்பாயா… இப்படிக்கு உன் குட்டிமா…”

அந்த ஒருவன் நான் தான் என்பதை படித்த மாத்திரத்திலேயே தெரிந்துகொண்டேன். தமிழுக்கும் அமுதென்று பெயர் என்று சொல்ல கேட்டிருக்கிறேன் அதில் காதலும் கலந்தால் தேவாமிர்தம் என்று அப்போதே உணர்ந்தேன். தூயதமிழில் கவிதை நடையில் முயற்சித்து அவள் அனுப்பியது நான் நினைத்ததை விட பலமடங்கு பெரியது.

உலகிலேயே அந்நேரம் அதிக சந்தோஷம் என்னை தவிர எவருக்கும் இருந்திருக்காது. வாகன இரைச்சல்கள் இனிய இசையாய் மாறி காதிற்குள் தேன் வார்த்தது அந்த இரவு நேரத்தில் அதை படித்த என்னுள் பிரகாச வெளிச்சங்கள் அனந்த துள்ளல்கள் காதல் நிரம்பிய கண்கள். விவரிக்க முடியாத சொர்க்கத்தில் மகிழ்ச்சியாய் பறந்தேன் சிறகு முளைத்து.

அதே நேரம் அவள் என் பதிலுக்காய் காத்திருப்பாள் என்ற நினைப்பும் என்னுள் எழாமல் இல்லை. அதற்காக நான் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவும் இல்லை. காதலின் வெற்றியில் அவளுக்கான பதிலை எழுதினேன்.

“நீ சொல்லிய திருடன் கண்டேன் அவன் இதயம் உன்னிடம் இருப்பதால் உன் இதயத்தை தரமறுக்கிறான். உன்னை போலவே அவனும் உன் கண்கள் காணாமல் இம்சை அடைகிறானாம். ஆதலால் எவ்வளவு விரைவாய் முடியுமோ அவ்வளவு விரைவாய் நீங்களும் உங்கள் கண்களும் ஒன்றாய் சேரவேண்டும் என்பதே உங்கள் இருவருக்கும் நான் தரும் தண்டனை.”

அவள் போலே எழுத முடியவில்லை இருந்தாலும் முடிந்தளவிற்கு என் மனதில் தோன்றியதை சிறு திருத்தம் கூட செய்யாமல் அப்படியே எழுதினேன் அவளுக்கும் அனுப்பினேன்.

“தங்கள் உதவிக்கு நன்றி. நான் அவனையும் அவனது கொஞ்சும் இம்சைகளையும் ரசிக்கிறேன். அவனை உயிரினும் மேலாய் காதலிக்கிறேன்..” வழக்கமான காதல் வரிகள் தான் எத்தனையோ புத்தகங்களில் திரைப்படங்களில் பார்த்து கேட்டது தான் ஆனால் அது நமக்காய் சொந்தம் ஆகும்போது அதில் இருக்கும் ஆனந்தம் தனி தான் என்பதை அந்நேரத்தில் நான் உணர்ந்தேன்.

இருந்தாலும் அந்த அவன் நான் என்பதை இன்னும் வெளிப்படையாய் கூற அவள் தயங்கிய தயக்கம் உடைக்க என்ன செய்வதென அறியாமல் யோசித்தேன். அதற்கும் அவளே வழிவகுத்தாள்.

“இப்போதுகூட ஒரு மணி நேரம் காக்க வைத்துவிட்டான். இதிலாவது அவனுக்கு மட்டும் தண்டனை கிடைக்குமா..” என் தயக்கம் உடைத்தாள் காதலன் நான் என்பதை என்று உறுதியாய் சொல்லாமல் சொல்லி.

“கண்டிப்பாக…. உன் இஷ்டம் போல் எந்த தண்டனை தந்தாலும் அவன் ஏற்றுக்கொள்வான்.”

“அவன் கண்கள் பார்த்து கொண்டே அவன் முகம் சிவக்க முத்தங்கள் பதிக்க வேண்டும்…” என் முகம் முழுதும் அவள் இதழின் ஈரம் உணர்ந்தேன் வழக்கம்போல் என்னுடன் வரும் அவளது நிழல் உருவத்தின் உதவியுடன். ஒரு சந்தோஷத்திற்கு மேல் மற்றொரு சந்தோஷம் என்ன சொல்ல நான் எங்கே இருக்கிறேன் என்பதை முழுதுமாய் மறந்தேன்.

“எப்போது தண்டனை தருவதாய் உத்தேசம்…”

“என் அருகில் இருந்தால் இப்போதே….”

“ஒ அப்படியா…. அப்படியானால் உன் அறைக்கதவை இப்போதே திறந்து அவனை உள்ளிழுத்து உன் தண்டனை நிறைவேற்று..”

“டேய் என்ன டா சொல்ற… விளையாடாத….” நான் தந்த அதிர்ச்சியில் அவளது தூயதமிழ் வழக்கமான தமிழுக்கு தடம் புரண்டது.

நான் சொன்னதை நம்பாமல் அவள் தந்த பதில் வந்து சேரும்போது உண்மையாக இருக்குமோ என்ற நப்பாசையில் திறந்தாள் கதவை. அவளது கண்கள் ஆச்சர்யத்தில் நிலை குத்தின. உதட்டில் இருந்து வார்த்தை தடைபட்டன. கண்களில் சந்தோஷ கண்ணீர் துளிர்விட்டன.

ஆம் எப்போது நாளை இரவு எட்டு மணி என்று முடிவு செய்தேனோ அப்போதே குறுஞ்செய்தியுடன் நானும் அவள்முன் நிற்க வேண்டும் என்று முடிவு செய்தென். அவளது அறை தோழிகளின் உதவியுடன் அவளறியாமல் முகவரியை பெற்று சென்னை கிளம்பினேன் இரவோடு இரவாய். இப்போது அவள் அறை முன் அவள் கண்கள் நிறைந்து நிற்கிறேன் அதன் விளைவாய். நான் வரும் நேரம் அவளின் தோழிகளை நான் வெளியே செல்ல சொல்லியிருந்ததால் எங்களுக்கான தனிமை அவள் அறை முழுதும் படர்ந்திருந்தது.

சிறிதும் யோசிக்காமல் என் சட்டை பிடித்து உள்ளிழுத்தாள். கட்டி அணைத்தாள். முத்தங்கள் அவசரமாக அழுத்தமாக பல பதித்தாள். என் முகத்தில் அவள் உதட்டுச்சாயம் பூசினாள். திகட்ட திகட்ட சிறு வார்த்தைகள் கூட பேசாமல் நான் அங்கு எப்படி வந்தேன் என்பதை கூட கேட்காமல் சந்தோஷத்தில் மன நிறைவில் கண்களில் கண்ணீரும் காதலும் சேர்ந்து வழிய அவளது தண்டனையை மட்டும் கண்ணும் கருத்துமாய் நிறைவேற்றினாள் என் கண்களை இமைக்காமல் பார்த்தவாறே.

இதை இப்போது அவன் எழுதி முடிக்கும் வேளையில் தான் அவனுள் எவ்வளவு ஆனந்தம். முகம் முழுதும் காதல் நிரம்பிய பிரகாசம். எழுதியதை பார்த்து பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான். அப்படியே தனது ப்ளாகில் அதனை பதிவேற்றமும் செய்தான்.

“என்ன சார் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி குழப்பம் இப்போ சந்தோஷம்..??” அடுத்த குறுஞ்செய்தி அவனது கைபேசியை நிறைத்தது இப்போது சமையலறையில் இருந்து.

“இல்ல நம்ம ஸ்டோரி எழுதினேன் அதான்….” என கைபேசியில் தட்டச்சு செய்து அவளுக்கு அனுப்பும்முன் ப்ளாகில் தனது கதைக்கு வாசகன் ஒருவனால் வந்த கருத்தை கவனித்தான். முகத்தில் இருந்த காதல் மறைந்து சோகம் அப்பியது. இதனால் தான் இக்கதையை இவ்வளவு நாள் எழுதாமல் இருந்தேனோ என்ற நினைப்பும் அவனுள் வந்தது. அக்கருத்திற்கு என்ன பதில் என புரியாமல் அந்த உண்மையை எப்படி விளக்குவது என தெரியாமல் அந்த இடத்தில் இருந்து எழுந்து வெளியே தோட்டத்தின் பக்கம் சென்றான்.

இதையெல்லாம் சமையலறையில் இருந்து கவனித்த அவளது மனைவி அவனது கணினி முன் சென்றாள் கருத்தை படித்தாள் சிறிதாய் சோக சிரிப்பை உதட்டோரம் உதிர்த்தாள். அவன் அனுப்ப முடியாத பதிலை இவள் அனுப்பினாள் கூடவே கணவனுக்கு ஒரு குறுஞ்செய்தியும்.

தோட்டத்தில் இருந்தவன் அவள் அனுப்பிய குறுஞ்செய்தி பார்த்தான். மறுபடியும் அவன் முகத்தில் காதல் ரேகைகள். ஆனந்த கண்ணீர் நிரம்பிய கண்களுடனும் உதட்டில் சிரிப்புடனும் மனைவி நோக்கி சென்றான்.

கருத்து: சார் காதல் வழிந்தோடும் கதை… வழக்கம் போல பிரமாதம். ஆனால் சிறு சந்தேகம். ஏன் நீங்க அந்த ஒரு மாசமா எஸ்.எம்.எஸ்லையே பேசிகிறிங்க. போன் பண்ணி பேசிர்க்கலாமே….டவுட்டு

பதில்: பேசி இருக்கலாம் தான்… என்ன பண்றது அவளுக்கு வாய் பேச முடியாது காதும் கேக்காதே

கணவனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி: டேய் இதுக்கெல்லாமா கவலைப்படுவ…. உண்மைய சொல்லிட்டு போறது…. சரி என்ன கேட்காம நீ இந்த கதை எழுதினதுக்கு உனக்கு தண்டனை தரனும். வேணும்னா உடனே வா.

எழுதியவர் : ஹரிசாரதி (25-May-13, 2:42 pm)
Tanglish : kurunseithi
பார்வை : 323

மேலே