நிறைந்திருக்கிறாய் அம்மா!

குடத்திற்குள்
நிறைந்திருக்கும் நீர்போல
நினைவுகள் முழுக்க
நிறைந்திருக்கிறாய் அம்மா!

இறந்து விட்டாய்
என்றாலும்
கிராமத்து வீட்டின்
ஒவ்வொரு பொருளும்
ஓராயிரம் நிகழ்வுகளை
உனது நினைவுகளை
அடித்து ஒலிக்கும்
அலாரமாய் எழுப்புகின்றன
அம்மா ! என் மனதில்

எம்.ஏ.தேர்வில் வெற்றி என்றவுடன்
பருத்த உடலோடு
ஓடிவந்து என் கையைப்பிடித்து
வாழ்த்துச்சொன்ன கைகள்
மரத்துப்போய் கிடைக்கும்
நிலையில் மனதில்
மோதும் நினைவுகள்

உனக்காக நூலகத்தில்
புத்தகம் எடுக்கப்போனேன் சிறுவயதில்
பற்றிக்கொண்ட படிக்கும்
பழக்கமே
உயர்ந்தோர் பலரிடம்
பழகும் வாய்ப்பாய் அமைந்தது அம்மா !

ஏழு வயதில் தந்தையை
இழந்த என் வளர்ச்சியில்
தந்தையுமாய் தாயுமாய்
செடியை வளர்க்கும்
சூரிய ஒளி போல
அருகில் இருந்தபோதும்
தூரத்தில் இருந்தபோதும்
ஒளியூட்டினாய்
உணர்வூட்டினாய்
நிறைவூட்டினாய்
செறிவூட்டினாய்
வாழ்வை அம்மா !

பசுவினை இழந்த கன்றாய்
கதறுகின்ற நிலையிலும்
வருத்தம் தோய்ந்த நிலையில்
நான் அமர்ந்திருந்த நிலையிலும்
நேரிலும் கைபேசியிலும்
ஆறுதல் தந்த உறவுகளும்
தேறுதல் தந்த நட்புகளும்
பிறந்த ஒவ்வொருவரும்
இறப்பது உறுதியென்னும்
நிலையால் ஆறுதல்
அடைகின்றேன் அம்மா !

எழுதியவர் : வா. நேரு (27-May-13, 8:50 pm)
சேர்த்தது : வா. நேரு
பார்வை : 194

சிறந்த கவிதைகள்

மேலே