குளத்தில் குளித்த சூரியன்

தன் காதலிக்கு
சூரியனைப் பிடித்துத்தர
குளத்துக்கு மேலே
துள்ளிக் குதிக்குது ஒரு கெண்டை மீன்

துள்ளிய வேகத்தில்
சூரியனைக் கவ்விக்
குளத்துக்குள் குதித்தது
அந்தக் கெண்டை மீன்...

குதித்த அதிர்வில்
குளத்துக்குள்
தவறி விழுகுது சூரியன் ....

குப்புற விழுந்தும்
முங்கிவிடாமல்
மேலே மிதக்குது
சூரியப் பந்து....

விழுந்த சூரியன்
எழுந்து விடாமல்
அமுக்கிக் கொண்டன
எருமைகள் எல்லாம் .....

தப்பி ஓடவிடாமல்
சூரியப் பந்தைப் பிடித்து
வீசி எறிந்து விளையாடினர்
சிறுவர்கள் எல்லாம் .....


சிறுவர்களோடும்
எருமைகளோடும்
குளத்து நீரில்
பொழுதெல்லாம்
தவ்வாலம் போட்ட சூரியன்

அந்தியில்
கரையேறி மலையேறி
முகில் போய்ச் சேருது .....

எழுதியவர் : மருத பாண்டியன் (31-May-13, 1:09 pm)
பார்வை : 113

மேலே