எந்திரம் போல் நடக்கின்றேன்.

கண்டமுதற் பார்வையில்
காலடிகள் கண்டேன்
வண்டுவரிப் பாடலினைக்
கால்கொலுசில் கேட்டேன்
முண்டக மலரிரண்டு
தண்டரிய துகிலில்
முண்டிவந்து நோக்குவதை
மறைந்தும் அறிந்தேன்.

சீதளப் பளிங்கு
மேனியதன் இடையே
வேதமதன் உட்பொருளாய்
வழுக்குமிடை கண்டேன்
பூதலங்கள் அத்தனையுள்
பொன்மேனி கொண்டு
தாதுக்களைத் தூவுமலர்
தனிமணம் நுகர்ந்தேன்.

காதிலணி கலனும்
கையினணி கலனும்
வாதமது செய்குவதாய்
வெண்ணொளியை வீச
நூதனப் பெண்ணவளின்
நெஞ்சுபுகு நோக்கில்
பாதமுள் நீக்குவகை
பாசாங்கு செய்தேன்.

புதுக்கலை சரிவதனை
ஒதுக்கிவிடும் ஒயிலில்
பதுமையோ பெண்ணொவென
குவிந்திடும் வியப்பில்
மதுமுகத்து அலர்ந்த
முறுவலில் முயங்கி
விதுமுகத்தில் வடிகின்ற
காந்தத்தில் தொலைந்தேன்.

சுந்தரவல்லி மங்கை
சோபனம் சொல்லி
வந்திரு கைகள் பற்றி
வாழ்த்திடு என்னையென்று
விந்தைகள் பலபுரிந்து
தந்தனள் தனையே அன்று
அந்தியில் கண்டகனவில்
எந்திரம்போல் நடக்கின்றேன்.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (31-May-13, 3:17 pm)
பார்வை : 147

மேலே