எதற்க்கு ஒரு மாதர் கூட்டம்

கருவானவுடன் கலைத்தெரிய

முளைவிட்டவுடன் கிள்ளியெறிய

முனைப்போடு அலையும் ஒரு கூட்டம்



தப்பிப்பிறந்தால்

எட்டிப்பார்க்காத அப்பா

தள்ளி நிற்கும் பாட்டி

கில்லி நகைக்கும் ஒரு கூட்டம்



பச்சிளம் பால் முதல்

முத்தழகு வரை

கசக்கி ஏறிய காத்திருக்கும் ஒரு கூட்டம்



பள்ளி அனுப்புகையில் பாகுபாடு

பள்ளி வகுப்பறையிலும் அதே பாடு

பள்ளி செல்லும் பாதையிலே எனை

அள்ளிச் செல்லும் அரக்கர்கள்

பேருந்தில் செல்கையிலே எனை

கிள்ளிச் செல்லும் கயவர்கள்

நடந்து செல்கையிலே எனை

எள்ளிச்செல்லும் நரிகள் கூட்டம்



பூப்பெய்தவுடன் பருவமங்கை

புன்னகைத்தலோ இன்னும் தொல்லை

மாமன் வரவு மகிழ்ச்சியில் செலவு

மாலை மஞ்சள் மேளம் தோரணம்

ஆடு தேடி அறிவிக்கும் ஒரு கூட்டம்



சந்தையிட்டதும் பலியிட

தந்தை தாய் சகிதம் வரும்

விந்தை மனிதர்கள் ஒரு கூட்டம்



சந்தையிலே

பெண் வங்கி தேடும்

மற்றொரு கூட்டம்



விலை போனபின்

தலை முழுகிய பெற்றோர்

தலைமுறை வேண்டும் உற்றோர்

பல கனவுகள் பகல் கனவுகள்

சில இரவுகள் சிவ இரவுகள்

வயிற்றிலே புது வரவுகள்

வரவுகளைச் சோதிக்க மீண்டும் ஒரு கூட்டம்



மரணம் கண்டு மீண்ட ஜனனம்

விடை தெரியா மறு ஜனனம்

வாரிசுக்கொண்டாட்டம்

என் ஜென்மமெனின்

மீண்டுமொரு திண்டாட்டம்

இதிலும் திருப்தியுறா ஒரு கூட்டம்



அம்மா என் கண்ணம்மா

சின்னம்மா என் பொன்னம்மா

இது ஆரம்பம்

அம்மா என் தொல்லை

சாவு ஏன் வரலை என

ஏமாற்றும் ரத்தக் கூட்டம்

நான் பெற்ற கூட்டம்



முதியோர் காப்பகம்

நாள்தோறும் பிள்ளைகள் ஞாபகம்

அசை போடும் பழைய ஞாபகம்

மீண்டும் ஒரு புதுக் கூட்டம்



ஒரு புறம் ஸ்ரீதேவி

மறுபுறம் மூதேவி

ஒரு புறம் பால் அபிஷேகம்

மறுபுறம் அமில அபிஷேகம

இத்தனை கூட்டங்களுக்கு நடுவில்

என்னைப்போன்று

தன்னை வெறுத்து

மண்ணைப்பார்த்து நடக்க

எதற்க்கு ஒரு மாதர் கூட்டம்


கருக் கலைப்பவர்களை விட

வெறுக்கிறோம் இறைவா அந்த

கரு அளிக்கும் உங்கள் கூட்டம்

எழுதியவர் : Nanjappan (7-Jun-13, 7:21 am)
பார்வை : 121

சிறந்த கவிதைகள்

மேலே