ம்....மௌனத்தின் கடைசி வார்த்தை...

உன்னோடான உரையாடல் நீடித்த சில நிமிடத் துளிகள்
ஒரு முழு நாளின் சோர்வின் வார்த்தைகளை தாங்கியிருந்தன
இருந்தும் தாழ் திறக்கும் தனிமையை கொடுத்திருந்தன
மென்மையான இறகின் தொடுதலை உணர்த்தி
தேகத்தின் ஏதோ ஒரு நரம்பின் நாதத்தை சீண்டிச் சென்றன...
அடங்கிய இரவின் அருகில்
உன் குரலின் அண்மை
இசைக்காத ஒன்றை வாசித்துச் சென்றது
காலை சுற்றித் தழுவி நழுவும் நதியின் நீரைப் போல
செவி நனைத்து நெஞ்சம் வருடி
மோகத்தின் மிச்சங்களை மறைத்துவிட்டு
காமமில்லாக் காதலைக் சொல்லிச் சென்றது
பெரிதாய் பரிமாறப்பட்ட
மௌனத்தின் கடைசி வார்த்தை மட்டும்
நித்திரையை தொலைக்க வைத்து
நினைவுகளில் நீந்திக் கொண்டிருக்கின்றன...