இறையெனப்படுவது யாதெனில்..
தினமும் பூசிக்கொள்கிறது
கொலையறுப்பு ரத்த
ஒழுகல்களை....
வேல்மலை... நல்மேய்ப்பர்
மெக்கா கோபுர
புகைப்படங்கள் ...!
இறைச்சிக் கூடங்களில்....
பொதுக் கட்டில்கள்
தடுத்துப் பிரிக்கிறது
அவிழ்த்தெறிந்த ஆடைகள்...
தடுப்புக்குள் ஒளிர்கிறது
அமைதியாய் ஒரு
அம்மன்விளக்கு
மல்லிப்பூ வாசனைகளோடு...
பளிங்குத் தரைகளில்
வெண்கலச் சிலைகளாய்
அபிநயம் பிடிப்பது....
கரகச் செம்புகளோடு
கால்கள் சுழற்றுகிறது
பெருவழி வீதிகளில்.....
கட்டை அளவுகளோடு
தடம் பிறழா மிருதங்க
மெல்லிசையதிர்வுகள்
உதிர்ப்பது....
நெற்றிக்கட்டு வியர்வை
வழிதல்
பறைச் சத்தங்களாய்
மண்ணிசை பொழிகிறது....!
சிறப்புத் தரிசன
வரிசைகளில்
பொட்டலங்களாய்
அடைந்து புழுங்குவது......
மலை மரத்தடி
தொன்னையிலைப் பச்சை
குழுமக் கையேந்தல்களாய்
சிரித்து மணக்கிறது...
இல்லையென்று
எப்படிச்சொல்ல....? எங்கும்
நிறைந்திருக்கிறது
இறை....
பணத் தேடல்களாகவும்
பசி மூலங்களாகவும்......!