ஒரு குழந்தை பேசுகிறது.(தாரகை)
நிரம்பி வழிகிறது
எங்களைத் தேடி
மருத்துவமனைகளும்
திருத்தலங்களும்
நிராகதியற்று
எறியப்படுகின்றோம்
அரசு தொட்டில்களிலும்
அரசாங்க ஆஸ்பத்திரிகளிலும்
பருவத்தின் அராஜகத்தால்
திருமணத்தின் முன்னரே
ஈருடல் பசியாற நடந்த
அரங்கேற்ற வேளையால்
அவதானிக்கும் பிறவிகள்.
தெருக்களில் திரியும்
எங்கள் சிலரின் பூர்வீகம்.
அரும்பியதுமோ இல்லை
அரைகுறையாய் வளர்ந்ததுமோ
அறுத்து கூறுபோட்டு
அப்புறப்படுத்தப்படும் நாங்கள்
மிருக வேட்டையில்
சிதறப்படும் இறைச்சி துண்டுகள்
தாயின் ஸ்பரிசம்
தாயின் பாசம்
தாய் பால்
நாயிற்கும் கிடைக்கும்.
காய்கின்றோம் நாங்கள்.
உங்களின் நிறைவேறா ஆசைகளை
மாலையாக்கி அணிவிக்கின்றீர்கள்
எங்களின் கழுத்தை நெரிக்கிறது
நிர்பந்த இலட்சியங்களாய்
தூரிகை தேடுகின்றோம்
எழுதுகோல் திணிக்கப்படுகிறது.
மாறுபட்டு சிந்திக்கின்றோம்
வேறுபடுத்தி காட்டப்படுகின்றோம்.
சீர்கெட்ட இளைய சமுதாயமென
எங்களை ஏளனம் செய்யும்
நீங்கள் தானே எங்களின் பிரம்மாக்கள்.
ஆனால் உங்களால் நாங்கள்
சிருஷ்டிக்கப்படவில்லை
சிதறடிக்கப்படுகிறோம்.
செதுக்கப்படவில்லை.
சிதைக்கப்படுகின்றோம்.