திராவிடம் தேவைதானா?

ஆதிக்கவர்க்கத்தின் கீழ்
அடிமைப்பட்டவனை
அதட்டி உசுப்பிவிட்டு
அவனுக்கானதை பெற்றுவிட
திராவிடமென்னும் சொல்
பயன்பட்டதுதான்
திராவிடமென்பது ஏற்படுத்திய
மாற்றத்தை
மறைப்பதிற்கில்லை
மறுப்பதற்கில்லை
கருத்தோடு திராவிடம் பேசிய
கருஞ்சட்டை வீரனன்று
கேரளத்தவன் உரிமைதனை மீட்டெடுக்க
வைக்கம் வரை சென்று போராடி
வாகை சூடி வந்தார்
பறிகொடுத்த உரிமைதனை மீட்க
பரிதவித்து தவிக்கையிலே
படக்கென்று துடித்தெழுந்து
பக்கத்து மாநிலம் சென்று
உடல்நலக் குறைவிலும் போராடி
சிறையும் சென்றார்
எத்தனை கேரளத்தவன்
இதை அறிவரோ?
எத்தனை நாட்கள்
இதை நினைவில் கொள்வரோ?
பெரியாரின் துணிச்சல் இப்போது
எவனுக்கிங்குண்டு?
எவனுக்கெதிராய்
எதற்கெதிராய்
ஆரம்பிக்கப்பட்ட திராவிடம்
இப்போது அவனது கைகளிலே
சிக்கிக் கொண்டது
ஆலயத்தில் மணியாட்டுபவன்
அடிமைகள் நீங்களடாவென
அமைதியாய் இருக்கின்றான்
ஆனால் இங்கு பலரும்
அடிமையில் உயர்ந்தவன் நானெனவும்
அடிமையில் தாழ்ந்தவன் நீயெனவும்
அடித்துக் கொள்கின்றான்
நீ தாழ்ந்தவன் அல்ல
தாழ்த்தப்பட்டவன் என்பதனை
எப்போது உணர்வாய்?
உனக்கொரு தேவையெனில்
எழுதி கடிதமிட்டு
ஓடி மண்டியிட்டு
பிச்சை கேட்கிறாய்
டெல்லியிடம்
திராவிடனிடம் தானே
தண்ணீர் கூட பிச்சை கேட்கிறாய்
அவனுக்கில்லாத திராவிடப்பற்று
உனக்கு மட்டுமேனடா தமிழா?
முன்னொரு காலத்தில்
நமக்கானதை பெற்றிடவும்
பலவற்றை ஒழித்திடவும்
திராவிடமென்னும் ஆயுதத்தை
கையாண்டோம்
ஆனால்
இப்போதுள்ள நிலைதனிலே
திராவிடம் தேவைதானா?
சிந்தித்துக் கொள்ளடா தமிழா
சிந்தித்துக் கொள்