வென்றிட வா…
சின்னச் சின்ன பறவையெல்லாம்
சிறகை விரித்துப் பறக்குதம்மா,
அன்னம் போன்ற பெண்களெல்லாம்
அடங்கி யிருந்தால் ஆகாதம்மா- இன்னும்
அடங்கி யிருந்தால் ஆகாதம்மா..
(சின்ன.. )
முன்னைக் கதைகள் பேசிப்பேச்
முடக்கி வைத்திடப் பார்க்குதம்மா,
அன்னை என்றே ஆனபின்னும்
அடங்கிக் கிடந்திடல் ஆகாதம்மா- இன்னும்
அடங்கிக் கிடந்திடல் ஆகாதம்மா..
(சின்ன.. )
உன்னைப் போலே ஒருத்தியங்கே
உலவி வருகிறாள் வானில்சென்றே,
இன்னும் என்ன பழையகதைகள்
எழுந்து வந்திடு ஏற்றம்பெற்றே- நீயும்
எழுந்து வந்திடு ஏற்றம்பெற்றே..
(சின்ன.. )
அடக்கு முறைகளைத் தகர்த்துவிட்டே
ஆழப் பிறந்தவள் நீயேவந்திடு,
முடக்கிடும் பேதம் ஒழித்துச்செல்வாய்
முந்திட வாழ்வில் அழைத்துச்செல்வாய்- என்றும்
முந்திட வாழ்வில் அழைத்துச்செல்வாய்..
(சின்ன.. )
இன்ப வாழ்வின் அடிப்படைநீதான்
இருக்குது பலகதை சரித்திரத்தில்தான்,
வென்றிட வந்திடு வெளியிலேதான்
வேளை இதுதான் வென்றிடத்தான்- நல்ல
வேளை இதுதான் வென்றிடத்தான்..
(சின்ன.. )