பாசறைகள் நமக்காக
வானம் காத்திருக்குது தோழா
மின்னும் நட்சத்திரத் தாரகைகளும்
சந்திர சூரிய ஆட்சியாளர்களும்
இன்னும் வெடித்து அழிக்கவில்லையே...ஏன்?
எல்லாம் நமக்காக தோழா ..!
பூமிக்கடியில் வாழும் அனைத்து
உயிரினங்களும் வாழ்கிறதே எதைஎதிர்பார்த்து ?
பொங்கி யெழு விண்ணைத் தொடும் வரை
நம் பாசறைகள் எங்கும் எதிரொலிக்கட்டும்
எல்லாம் நமக்காகத் தோழா ...!
இயற்கை அன்னை தாலாட்டில்
வளங்களெல்லாம் வெடித்துப் பூக்கிறதே
காயும் கனியும் கொடையாக
குறையாது எதிர்பாராது அளிக்கிறதே
எல்லாம் நமக்காகத் தோழா ..!
இவைகளெல்லாம் வாய் பேசாமல் நகராமல்
தேடாமல் பொங்காமல் மவுனமாய்
சாதித்துக் கொண்டிருக்கிறதே தினமும்
நீ மட்டும் ஏன் கண்களில் கண்ணீரை
பூமியில் இறைக்கின்றாய் உப்பாக்கவா ?
எல்லாம் நமக்காகத் தோழா..!
காத்துக் கிடக்குது நம் தாத்தா வின்
உயிர் செல்வங்கள் தங்க ஆயுதங்களாய்
நம்மைப் பார்த்து ஏளனமாய் சிரிக்குது
சொல்லும் செயலும் நம் கண் மணிகளாக
வீர நடை போடு !எழுந்து வா என்று
எல்லாம் நமக்காகத் தோழா ..!
வானை அளக்கலாம் கடலில் நடக்கலாம்
பூமிப் பந்தைப் பிடிக்கலாம் விண்ணில்
அனுமன் வாலையும் நிமிர்த்தலாம்
வானில் வான வில்லையும் பிடிக்கலாம்
எல்லாம் நமக்காகத் தோழா..!
வானம் நம் வசம் தாமதிக்காதே
வியங்காமல் முயங்காமல் மயங்காமல்
மிக விரைவிலே விரைந்து தெளிந்து
உயிர்த்து மீண்டும் பீனிக்ஸ் பறவையாய்
எல்லாம் நமக்காகத் தோழா..!
காலம் மண்ணைத் தேடுகிறது
காலன் நம்மைத் தேடுகிறது
காவல் தேவையில்லை வளரும் பயிருக்கு
காவல் வேண்டாம் வளரா பயிருக்கு
நீதியும் நியாயமும் நம் மனசாட்சியே
வீழ்ந்தது போதும் மனம் தளராதே
எல்லாம் நமக்காகத் தானே தோழா ...!