கிறு கிறு கிரிக்கெட்டு -பொள்ளாச்சி அபி

எனது ப்ளாக் கிற்காக எழுதியது.அன்று நான் எழுதியதற்கும்,இப்போதுள்ள நிலைக்கும் பெரிதாக வேறுபாடு எதுவும் இல்லை என்பதால் அப்படியே ,இதனை இங்கு பதிவிடுவது பொருத்தம் என நினைக்கிறேன்.! - பொள்ளாச்சி அபி
-----------------------------------
Thursday, 31 March 2011

இளைஞர்களைக் கிறுக்காக்கும் கிரிக்கெட்.,!

இன்று உலகஅளவில்,இளைஞர்களைக் கிறுக்கர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது கிரிக்கெட் என்ற விளையாட்டு.நமது நாட்டைப் பொறுத்தவரை இந்தியா-பாகிஸ்தான் மோதுகின்றபோது, இந்தியவீதிகளே வெறிச்சோடிப் போயிருக்கிறது.அரசு ஊழியர்கள்கூட,அன்று விடுமறை எடுத்துக் கொண்டு கிரிக்கைட்டை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது ஒரு விளையாட்டு என்ற அளவில் மக்கள் ரசித்துவிட்டுப்போகட்டும்.நாம் அந்த ரசனையைக் குறை சொல்லவில்லை.
ஆனால்,இந்த கிரிக்கெட் விளையாட்டிற்குப் பின்னால் என்னவெல்லாம் நடக்கிறது என்பதையறிந்து கொள்ளவும் நம் இளைஞர்கள் முன்வரவேண்டும் என்பதும் நமது வேண்டுகோள்.

உலகஅளவில் வல்லரசுகளாகத் திகழும் இங்கிலாந்தைத் தவிர,அமெரிக்கா, ரஷ்யா,ஜப்பான்,சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கிரிக்கெட் என்ற விளையாட்டுக்கான அணியே கிடையாது. ஏனெனில் மனித உழைப்பையும்,நேரத்தையும் பெருமளவில் வெட்டியாகத் தொலைக்கும் இந்த விளையாட்டு என்பதால்,அந்த அரசுகள் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதில்லை.ஆனால் இங்கிலாந்து பிரபுக்களின் தேசம்.அவர்கள் உடலை வருத்தும் விளையாட்டு மட்டுமின்றி,எந்த செயலையும் செய்யமாட்டார்கள். அவர்களுக்கு கிரிக்கெட்தான் சரி,ஒரே இடத்தில் நின்றுகொண்டு "டொக்கு" வைக்க சவுகரியமாக இந்த விளையாட்டு இருந்தது என்பதைவிட இதற்காகவே அவர்கள் கண்டுபிடித்த விளையாட்டுதான் இந்த கிரிக்கெட்.

அது போகட்டும்.., உடலுக்கு ஆரோக்கியம் தரும் விளையாட்டுக்களாக,ஃபுட்பால்,ஹாக்கி,கபடி,பேட்மிண்டன்,டென்னிஸ் என ஏராளமான விளையாட்டுக்கள் இருந்தும் கிரிக்கெட்டிற்கு மட்டும் ஏன் இந்த முக்கியத்துவம்.?.

ஏனெனில்.மற்ற விளையாட்டுக்கள் எல்லாமே,குறிப்பிட்ட கால அளவிற்குள் விளையாடப்படுபவை.அந்த விளையாட்டுக்களைத் தொடங்கிவிட்டால் அதில் இடைவெளியே பெரும்பாலும் இருக்காது. ஆனால்,கிரிக்கெட்டில் அப்படியில்லை.ஒவ்வொரு பந்துக்கும் ஒரு இடைவெளி...ஓவர்,பேட்ஸ்மேன்,பௌலர்கள் மாறும்போதும்,ஃபீல்டர்கள் அடிவாங்கும்போதும்,பேட்ஸ்மேன் அவுட்டா,அவுட்டில்லையா.?,எல்.பி.டபிள்யூவா,இல்லையா.? வீசிய பந்து வைடா,வைடில்லையா.? எனத் தீர்மானிக்கும் வரையும்,காத்திருக்கும் வரையும் கிடைக்கும் இடைவெளி..என இப்படி எத்தனையோ இடைவெளிகள்..

இந்த இடைவெளிகள்தான்,கிரிக்கெட் என்ற விளையாட்டினை உச்சத்திற்கு கொண்டு செல்லவைத்திருக்கிறது.இந்த இடைவெளிகளைத்தான் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கான விளம்பர நேரமாக,இந்தியநிறுவனங்கள் மட்டுமின்றி உலக அளவிலான பெரும் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்கின்றன.

சற்றே இதனை ரிவர்சில் பார்த்தால்.தங்கள் விளம்பரங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும்,அதனால் கிடைக்கும் வணிகத்தின் மூலம் பெறும் கோடிகளுக்காவும்தான்,கிரிக்கெட் என்ற விளையாட்டு நடத்தப்படுகிறது. இதற்காகவே கிரிக்கெட்டைப் பற்றி பெருமளவில் செய்திகள் பரப்பப்படுகின்றன. போட்டோக்களும்,வீரர்களின் புத்திசாலித்தனங்களும், விளையாடும் முறைகளைப் பற்றியும் பெருமளவில் மிகைப்படுத்தப்பட்டு, பெருமைப்படுத்தப்பட்டு செய்திகள் வெளியிடப்படுகின்றன.

இவை மட்டுமே இந்நிறுவனங்கள் லாபம் பெறுவதற்கு போதுமானதல்ல.மேலும் தொடர்ந்து இதேபோன்று வருவாய் பெறுவதற்கு உத்தரவாதமும் இல்லை.எனவேதான் இந்த வணிகநிறுவனங்கள், புத்திசாலித்தனமாக,கிரிக்கெட் விளையாட்டை நமது தேசபக்தியோடு இணைத்து விட்டது.ஏனெனில்,ஒருநாட்டில் வசிக்கும் மனிதன்,எதற்காவும் சிலவற்றை விட்டுக் கொடுப்பான்.ஆனால் தேசபக்தியை மட்டும் பிறநாடுகளுக்காக விட்டுக்கொடுக்கமாட்டான் என்பது இயல்பு.இதுதான்..,இதுவேதான்..,நமக்கு இருக்கும் இந்த உணர்ச்சியைத்தான் லாபம் பார்ப்பவர்கள் பயன்படுத்திக் கொண்டுவருகின்றனர்.
இதேபோன்ற லாபத்திற்காகவேதான்,இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பதவிகளைப்பிடிக்கவும் போட்டா போட்டியும், சண்டையும்,வழக்குகளும் நடக்கின்றன. நேரடியாக நமக்குத் தெரியும்.

இந்தவெளிப்படையான அம்சங்களைத் தவிர,இந்த கிரிக்கெட்டிற்குப் பின்னால் வேறொரு உலகமும் இருக்கிறது.இதில் மிகப்பெரிய தாதாக்களும், அரசியல்வாதிகளும்.. ஏன் அரசு நிர்வாகத்தில் இருக்கும் சிலரின் கைகள்கூட இருக்கிறது.அதுதான்,கிரிக்கெட் டீம்களின் மீது பணம் கட்டப்படும் பெட்டுகள் எனப்படும் சூதாட்டங்கள்..இதில் புரள்வது லட்சங்கள் அல்ல,பல லட்சம் கோடிகள்..,இவையனைத்தும் ஒரே நெட்வொர்க்காகவோ,அல்லது பல நெட்வெர்க்குகளாகவோ இணைந்துள்ளன.
அதுவும் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள,அணிகள் விளையாடும்போது,கட்டப்படும் தொகைகள் அதிகம்.ஒரு அணி ஜெயிக்கும் என்று கட்டப்படும் பணம் மிக அதிகம் என்றால்,அந்த அணியைத் தோற்கடிக்க வீரர்கள் முதல் இவ்விளையாட்டில் தொடர்புடைய அனைவருக்கும் கோடிக்கணக்கில் லஞ்சம் தரப்படுகிறது.தரப்படும் லஞ்சமே கோடிகளில் என்றால்..,கிடைக்கும் லாபம் குறித்து நீங்களே ஒரு முடிவிற்கு வரமுடியும்.
இப்போது புரிகிறதா..? கிரிக்கெட்டிற்கு என்று ஏன் இவ்வளவு மவுசு என்று..,

எழுதியவர் : பொள்ளாச்சி அபி -B +ve (4-Jul-13, 10:36 pm)
பார்வை : 154

மேலே