வரப்பிரசாதம்.
மாரடைப்புக்கு
எண்ணெய் பதார்த்தம்
அசைவ உணவுகள்
உண்பதை தவிர்த்தலோடு
முக்கியமாய்
சொந்த வீட்டின்
மின்சார கட்டணம்
பற்றி அறியாதிருப்பதும் நல்லது.
தன் கட்டண
அலகுகளால்
கொத்திக் கொத்தி
உயிரைக் கொல்லும் மின்சாரக்
கழுகிடமிருந்து
ஒதுங்கியிருப்பது
இப்போதைக்கு நல்லது
விரோதிகளுக்கு
தண்டனை வழங்கத்
தீர்மானிப்பீர்கள் என்றால்
சற்றும் தாமதிக்காமல்
காசு கொடுத்து
அவனுடைய சொந்த வீட்டு
மின்சாரக் கட்டணத்தை
கட்டிவிட்டு வரும்படி
செய்யுங்கள்
ஆயுளுக்கும் உங்கள் பக்கம்
தலைவைத்தும் படுக்கமாட்டான்
இப்போதெல்லாம்
யாரும் எவரையும்
எங்காவது போய்
செத்து தொலை என்பதற்கு
மாறாக
மின்சாரக் கட்டணம்
கட்ட அனுப்பிவிடுவேன்
என்றே பயம் காட்டுகின்றார்கள்.
வீட்டுக்குள் வெளிச்சம் விதைத்து
வாழ்வினில் இருளை வளர்க்கும்
மின்சாரமானது
காகிதங்களின் வழியாய்
கட்டண வடிவில்
இதயத்தை தாக்குகின்றது.
மின் உற்பத்தியை
இனி எங்கள்
கண்ணீரிலேயே செய்து விடலாம்
என்பதுபோல்
நிரம்பி வழிகின்றன
நீர்த்தேக்கம் போல விழிகள்
மின்னல் கண்ணை
பறித்தக் காலம்போய்
மின்சாரக் கட்டணம்
உயிரை பறிக்கும் காலத்தில்
மிசாரத்தை வெட்டிவிட்டு
ஏற்றிவைக்கும்
மணெண்ணெய் விளக்குகளில்
எரிவது திரியல்ல ஏழ்மை
உபயோகத்திற்கான
மின்சாரம்
உபத்திரவத்திற்கான
சம்சாரமாகிப் போனதனால்
வீடுகளை மறந்து
ஆசிரமங்களில் அடைக்கலமாகி
ஆசைகளை துறக்கும்
துறவியாகும் பிறவிகளுக்கு
ஒரு வரப்பிரசாதமாகித்தான் போனது.
(அண்மையில் மின்சாரக் கட்டணம் செலுத்தச் சென்ற ஒருவர் கட்டண உயர்வால் வந்த புதிய தொகையை கண்டு மாரடைப்பில் இறந்த சம்பவமொன்று இலங்கையில் இடம்பெற்றதன்
நினைவாய் இந்தக் கவிதை )