நீங்கள் காதலியுங்கள்..! -பொள்ளாச்சி அபி
![](https://eluthu.com/images/loading.gif)
சாதிச்சங்கிலிகளை
அறுக்கமுடியாத அவமானத்தில்..
வான் பார்க்காமல்
வெட்கித் தலைகுனிந்து,
மண்நோக்கி விழுந்து
செத்துப்போனான் இளவரசன்..,
அதனால் நமக்கென்ன கவலை.?
காதல் தூய்மையானது
என கவிதைகள் படையுங்கள்..
இலக்கியம் என்பது வேறெதற்கு.?
சாதி மதங்கள் கூடாதென
கட்டுரை தீட்டுங்கள்..!
கல்வியென்பது வேறெதற்கு.?
மனிதர்களின் உடலமைப்பில்
ஒற்றுமை குறித்து ஆராயுங்கள்..!
விஞ்ஞான அறிவு வேறெதற்கு.?
ஒருவேளை..
சாதி மத மறுப்புத் திருமணமெனில்
நாடகக் காதலெனக் கூறி
நீதி மன்றம் செல்வோம்..
அவை வேறெதற்கு இருக்கின்றன.?
அனார்கலிக்கு முன்பிருந்தே
“ஆதிக்கம்”செலுத்துகின்ற
வரலாற்றை.., உமக்காக
எழுதி வைத்துவிட்டு
அந்த நந்தனை எரித்த
நெருப்பின் மிச்சத்தை
அணைந்து விடாமல் காத்திருக்கிறோம்..,
என்பதை நீ மறந்து விடாதே..!
இன்னும் நூறாண்டுகளானாலும்
“சாதீ”யிலிருந்து நீங்கள்
வெளியேறிவிடக் கூடாதென்பதற்காகவே
இன்னும் ஓராயிரம்
திவ்யாக்களும் இளவசரன்களும்
எமக்குத் தேவை..!
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
எமக்குள் எரிந்துகொண்டிருக்கிறது
ஆதிக்க நெருப்பு..,
சாதிப்பற்றும், மத துவேஷமுமாக..!
அதற்கு ஆகுதியாய்
இன்னும் தேவைப்படுகிறது
மனித இரத்தம்..!
ஆகவே
நீங்கள் காதலியுங்கள்..!
எழுத்திலும்,பேச்சிலும் மட்டும்..!
----------------