மகாத்மாவுக்கு ஒரு பதில் (டாக்டர் பி.ஆர் அம்பேத்கார்)- பகுதி-3

மகாத்மாவுக்கு ஒரு பதில்.
**************************************
டாக்டர் பி.ஆர் அம்பேத்கார்.

இந்துமதத் பெரியார்களை பெரும்பாலானவர்கள் பின்பற்றி நடந்தால் மட்டுமே அந்த மதம் ஏற்றுகொள்ளக் கூடியது ஆகும் என்ற மகாத்மாவின் வாதம் மற்றொரு காரணத்தாலும் தவறானது ஆகும்.

சைதன்யரை போன்ற புகழ்பெற்ற மனிதர்களை உதாரணமாகக் காட்டுவதன் மூலம் மகாத்மா என்ன சொல்ல வருகிறார்-? இந்து சமுதாயத்தில் எந்த விதமான அடிப்படை மாறுதலையுமே செய்யாமல் உயர்சாதி இந்துக்கள் தாழ்ந்தசாதி இந்துக்களுடன் கொள்ளும் நடவடிக்கைகளில் ஒரு உயர்ந்த பண்பாட்டை மேற்கொள்ளுமாறு அவர்களை இணங்கச் செய்வதன் மூலமே இந்துச் சமூகத்தை எல்லோரும் ஏற்கத்தக்க- மகிழ்ச்சிகரமான - சமூகமாக ஆக்கிவிட முடியும் என்று மகாத்மா சொல்ல வருகிறார் என்றே மொத்தத்தில் எனக்குப்படுகிறது.

இந்த வகையான கருத்தை நான் முற்றாக எதிர்க்கிறேன், தாங்கள் வாழ்க்கையில் ஒரு உயர்ந்த சமூக இலட்சியத்தைக் கடைபிடிக்க முயற்சிக்கிற சாதி இந்துக்களை நான் மதிக்கிறேன், இப்படிப்பட்ட மனிதர்களே இந்தியாவில் இல்லாது போனால் இந்தியா இன்னும் மிக மோசமான ஒரு நாடாகவே இருக்கும்,

இருந்தாலும், சாதி இந்துக்களின் சொந்த குணங்களை உயர்த்துவதன் மூலம் அவர்களை நல்ல மனிதர்களாக மாற்ற முயற்ச்சிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அனைவரும் அவர்களுடைய ஆற்றலை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவித மாயையை தோற்றுவித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றே எனக்குப்படுகிறது, ஒருவருடைய சொந்த குணாம்சங்களே ஒரு குறிப்பிட்ட தொழிலை செய்பவனை நல்லவனாக்கிவிடுமா-? ''(உதாரணமாக ஒரு நல்ல மனிதன் தயாரிக்கும் குண்டு வெடிக்காமல் இருக்குமா-?'' ''அவன் தயாரிக்கும் விஷப்புகை கொல்லாமல் இருக்குமா-?)'' அது சாத்தியமில்லை என்று ஏற்றுகொண்டால் சாத்திய உணர்வுகளால் நிரம்பிய ஒருவனின் சொந்த நல்ல குணங்கள் மட்டும் எப்படி அவனை நல்லவவன் ஆக்கிவிடும்-?.

அதாவது, சாதியத்தால் நிரம்பிய மனிதனை அவனது சக மனிதர்களை நண்பர்களாகவும் சமமானவர்களாகவும் நடத்துகிற மனிதனாக ஆக்க முடியும், தன சக மனிதர்களை தன சாதியைச் சேர்ந்த பிறர் பார்கின்ற பார்வையில் இருந்து மாறுபட்டுப் பார்கிரவனாக அவனை ஆக்க முடியுமா-?.

தன் சக மனிதர்களை உறவினராகவோ சமமானவர்கலாகவோ ஒரு இந்து நடத்துவான் என்று எதிர்பார்க்க முடியாது, உண்மையில் தன சாதியைச் சாராத அனைவரையும் ஒரு இந்துவானவன் தன்னிலிருந்து பிரித்து அந்நியமாகவே பார்கிறான்.

அவர்களுக்கு எதிராக எல்லாவிதமான சூழ்ச்சிகளையும் மோசடிகளையும் வெட்கமில்லாமல் மேற்கொள்கிறான், ஆகா உயர்ந்த இந்து தாழ்ந்த இந்து இருக்கிறார்கள், ''நல்ல இந்து'' இல்லை.

அவனுடைய சொந்த குணாம்சத்தில் உள்ள ஏதாவது குறைபாட்டின் காரணமாகவே அவன் அப்படியிருக்கிறான் என்று இதற்கு பொருளல்ல, அவனுடைய சக மனிதர்களுடன் அவன் கொள்ளும் உறவின் அடிப்படையில் தான் குறைபாடு உள்ளது, மனிதர்களுக்கிடையே ஆன உறவுகள் அடிப்படையிலேயே தவறானதாக இருக்கும்போது அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்கள் என்பவை பின்பற்றத் தக்கதாக இருக்க முடியாது.

ஓர் அடிமைக்கு அவனுடைய எஜமானன் உயர்ந்தவனாகவோ தாழ்ந்தவனாகவோ இருக்கலாம், ஆனால் நல்ல எஜமானவன் என்பவன் இருக்க முடியாது, ஒரு நல்ல மனிதன் எஜமானனாக இருக்க முடியாது, அது போலவே ஒரு எஜமானன் நல்ல மனிதனாக இருக்கவும் முடியாது.

உயர்ந்த சாதிக்கும் தாழ்ந்த சாதிக்கும் இடையிலான உறவுமுறைக்கும் இது பொருந்தும், ஒரு தாழ்ந்த சாதிக்காரனுக்கு ஓர் உயர்ந்தசாதிக்காரன் இன்னொரு உயர்ந்தசாதிக்காரனோடு ஒப்பிடும்போது உயர்ந்தவனாகவோ தாழ்ந்தவனாகவோ இருக்கலாம், ஓர் உயர்சாதிக்காரன் தன்னை வேறுபடுத்திக் காட்டிக்கொள்வதற்கு ஒரு தாழ்ந்த சாதிக்காரனை வைத்திருக்கும்வரை அவன் நல்ல மனிதனாக இருக்க முடியாது.

வருணத்தை சாதியை அடிப்படையாகக் கொண்ட சமூகம் தவறான உறவுமுறையை அடிப்படையாக கொண்ட சமூகமே, இதைப்பற்றி நான் என் உரையில் கூறியுள்ளேன், என் வாதங்களை முறியடிப்பதற்கு மகாத்மா முயற்சி எடுப்பார் என்று நம்பினேன், அதற்கு மாறாக அவர் நால்வருண அமைப்பின் மீது தனக்கு உள்ள நம்பிக்கையானது எத்தன அடிப்படையில் ஏற்பட்டது என்பதை விளக்காமல், தனது நம்பிக்கையைப் பற்றி மட்டுமே கூறிக்கொண்டு இருக்கிறார்.

மகாத்மா தான் சொல்வதை நடைமுறையில் கடைபிடிக்கிறாரா-? பொதுத்தன்மையை விளக்கும்போது தனிப்பட்ட விஷயங்களைக் கூறக்கூடாது, ஆனால் ஒரு கோட்பாட்டை (Doctrine ) உபதேசித்துக் கொண்டு, அதை மதக்கோட்பாடாகவே ( Dogma ) வைத்துகொண்டு இருக்கிற ஒருவர் தான் சொல்வதை எந்த அளவுக்கு நடைமுறையில் கடைபிடிக்கிறார் அறிய ஆவலாகத்தான் இருக்கிறது.

அந்த லட்சியம் அடைவதற்கு முடியாதது என்பதால் கூட அந்த லட்சியத்தை நடைமுறையில் கடைபிடிப்பதில் அவர் தோல்வியடைந்து இருக்கலாம், அல்லது அதை நடைமுறைப் படுத்த முடியாததற்கு அவருக்குள் உள்ள போலித்தனம் காரணமாக இருக்கலாம்.
===
எப்படியும் மகாத்மா தான் ஏற்றுக் கொண்டுள்ள கோட்பாட்டை தன் விஷயத்திலாவது எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்த முயற்ச்சித்தார் என்பதைப் பற்றி நான் விமர்சித்தால் என்னை நீங்கள் குறை சொல்லக்கூடாது.

மகாத்மா பிறப்பால் ஒரு வணிகர், அவரது முன்னோர்கள் தம் வணிகத்தொழிலை விட்டு மந்திரிகளானார்கள், அவரது சொந்த வாழ்க்கையிலே கூட அவர் தன் எதிர்காலத்தை தேர்ந்தெடுக்கும்போது அவர் வணிகத்தை விட்டுவிட்டு பாதி முனிவராகவும் பாதி அரசியல்வாதியாகவும் மாறினார்.

அவருடைய முன்னோர்களின் தொழிலான வணிகத்தில் அவர் ஈடுபடவே இல்லை, அவரது இளைய மகன் (தன் அப்பாவை அப்படியே பின் பற்றுகிறவர்) வைசியனாகப் பிறந்துவிட்டு பிராமணப் பெண்ணை மணந்துகொண்டார், ஒரு பத்திரிகை பெரு முதலாளிக்கு சேவை செய்யப் போய்விட்டார், தன் முன்னோர்களின் தொழிலை தேர்ந்து எடுக்காததற்காக அவரை மகாத்மா கண்டித்ததாக தெரியவில்லை.

''இதில் அவரவர்க்கு உள்ள கர்மத்தை அவரவர் செய்ய வேண்டுமென்ற உபதேசத்தை என்னவென்று சொல்வது''

ஒரு லட்சியத்தை மோசமான முன்னுதாரணங்களை கொண்டு மதிப்பிடுவது தவறுதான், ஆனால் ஒரு முன் உதாரணம் என்ற வகையில் மகாத்மா ஒன்றும் மற்றவர்களிடம் இருந்து மேம்பட்டு இல்லை.

லட்சியத்தை அடைவதில் அவர் தவறி இருந்தால் கூட அந்த லட்சியம் எட்டுவதற்கு அசாத்தியமானது; சராசரி மனிதர்களின் இயல்புகளுக்கு எதிரானது என்று சொல்லி இருக்க முடியும், கார்லைல் ஒரு விசயத்தைப் பற்றி சிந்திக்கும்முன்பே பேசத்தொடங்கிவிடுவாராம், சாதியைப்பற்றி மகாத்மா கருத்துகூருவதும் அப்படித்தானே இருக்கிறது-?.

அப்படி இல்லாவிட்டால் எனக்குத் தோன்றிய சில கேள்விகள் காந்திக்கு ஏன் தோன்றாமல் போய்விட்டது-?

ஒரு மனிதன் எப்போது தன் பரம்பரைத் தொழிலை தன் தொழிலாக விரும்பி ஏற்றுகொள்வான்-? பரம்பரைத் தொழில் ஒருவனுக்கு தகுதிப் பொருந்தாது, ஆதாயம் தராது என்ற நிலையில்கூட அதை ஏற்றுகொள்ள வேண்டுமா?

''-ஒழுக்கக் குறைவானது என்று கருதப்படுகிற ஒரு தொழிலை பரம்பரை தொழில் என்பதற்காக ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டுமா-?''-

''-பரம்பரைத் தொழிலைத்தான் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும் என்றால் ஒருவனுடைய தாத்தா விபச்சாரத் தரகராக இருந்தால் பேரனும் அப்படியே இருக்க வேண்டுமா?''-

''-ஒரு பெண்ணின் பாட்டி விபச்சாரத்தில் ஈடுபட்டால் அந்த பெண்ணும் அந்தத் தொழிலை மேற்கொள்ள வேண்டுமா?''-

என்னைப்பொருத்தவரை பரம்பரைத் தொழிலையே ஒருவர் மேற்கொள்ள வேண்டுமென்ற மகாத்மாவின் லட்சியம் நடைமுறைப்படுத்த முடியாத லட்சியமாகும், தார்மீக ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாத லட்சியமாகும்.


********************* தொடரும்.

எழுதியவர் - புரட்ச்சியாளர் டாக்டர் B .R அம்பேத்கார் ''அரிஜன்'' இதழ் - 15-08-1936


நன்றி;-
நூல் - சாதி ஒழிப்பு.
பக்கம்- 155,156,157,158,159.
வெளியீடு - அலைகள் பதிப்பகம், 1998
மொழியாக்கம் - வெ. கோவிந்தசாமி.

எழுதியவர் : டாக்டர் பி.ஆர் அம்பேத்கார (8-Jul-13, 2:16 pm)
சேர்த்தது : எமதர்மன்
பார்வை : 96

மேலே