உருவங்கள் மாறலாம்
கருவாகி உயிரானால்
உருவாகும் உறவுகள்
எருவாகிப் உலரும்வரை
எழுதிய பக்கங்கள் !
உயிராகி உலகினில்
உலவிடும் மனிதனுக்கு
மலர்ந்திடும் நட்புகள்
வாசமுள்ள பூக்கள் !
உள்ளத்தால் உறவுகள்
உருவங்கள் மாறலாம் !
உண்மை உள்ளத்தை
சமயத்தில் அறியலாம் !
வாடாத நட்பு பூக்கள்
வாழ்வில் என்றுமே
வாடிடும் நேரத்திலே
நாடிடும் நம்மையே !
உறவுகள் என்றுமே
அகத்தும் புறத்தும்
அரிதாரம் பூசிடும்
நிலையற்ற நடிகர்கள் !
நட்பெனும் நாயகர்கள்
நடிக்கத் தெரியாத
நடமாடும் மேடையில்
நாடகப் பாத்திரங்கள் !
உறவுகளில் உண்மையும்
உயர்ந்த உள்ளங்களும்
உலகினில் நிச்சயமாய்
அளவினில் அதிகமில்லை !
இறுகிய நட்புகள் இறுதிவரை
உருகிடும் உள்ளமுடன் என்றும்
அருகினில் இல்லையெனிலும்
அனுதினமும் நினைப்பவர்கள் !
கைவிடும் உறவுகளை காட்டிலும்
கைக் கொடுக்கும் நண்பர்களே
வையகத்தில் நலமாய் வாழ்ந்திட
வாய்மை நெஞ்சுடன் வாழ்த்துகிறேன் !
பழனி குமார்