கடவுள்

நீராய் நெருப்பாய் நிலமாய் காற்றாய்
நேராய் உயர்ந்த நெடுநீள் வானாய்
எங்கும் இருப்பவன் இறைவன் என்பர்
தங்கள் எண்ணம் தரணியில் விதைப்பர்
கடவுளில் பலவகை கண்டனர் நம்மவர்
இடத்திற் கொருவகை இறைவன் செய்தனர்
ஆக்கும் கடவுள் அழிக்கும் கடவுள்
காக்கும் கடவுள் கருணைக் கடவுள்
கல்விக் கடவுள் கலைகளின் கடவுள்
செல்வக் கடவுள் சீர்தரும் கடவுள்
வல்வினைக் கடவுள் வரந்தரும் கடவுள்
நல்வினை அருளி நம்மின் அனைத்து
இன்பமும் அன்பும் ஈந்திடும் கடவுள்
துன்பம் களைந்து துணைவரும் கடவுள்
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்
கேணியின் ஊற்றாய் கேட்பவர்க் கருள்வார்
இப்படி விளக்கம் ஏகமாய் இருந்தும்
தப்பாய் சிலபேர் தம்மையே சாமியின்
உருவம் என்று உலகை ஏய்த்து
பொருளும் புகழும் பொன்னும் பெறுவர்
சாமியின் மௌனங்கள் சாதகம் ஆனதால்
சாமியார் வைத்ததே சட்டம் ஆனது
கடவுளா பால்நெய் கனிகள் கேட்டார் ?
இடையில் உள்ளோர் ஏய்த்துப் பிழைத்தனர்
கடவுளா கோழிஆடு காவுகள் கேட்டார் ?
நடுவில் உள்ளோர் நாடகம் ஆடினர்
இன்னொரு சாரார் இறைவனே இல்லை
என்றொரு வாதம் எடுத்து வைப்பர்
ஆத்திகம் நாத்திகம் அவரவர் விருப்பு
சாத்திய நெஞ்சினில் சகலமும் கருப்பே
உனக்கு மேலொரு உன்னத சக்தியை
உணர்ந்திடு அதுதான் உண்மையில் கடவுள்
கடவுளை நேரில் கண்டவர் உளரோ
நடக்கும் கடவுளர் நம்முடன் இருக்கையில்
ஆண்டவன் தேடி ஆலயம் செல்லல்
வேண்டுமா இல்லையா விருப்பம் உமதே
உலகைப் படைத்தவர் இறைவன் என்றால்
உலகிற்கு உன்னை அளித்த
அன்னையும் தந்தையும் ஆண்டவன் அன்றோ?

14/07/2013 வெ. நாதமணி

எழுதியவர் : (14-Jul-13, 10:23 pm)
பார்வை : 255

மேலே