எனக்குள் இருக்கும் அவன்!

எனக்குள் இருக்கும் அவன்!
என்னை புரட்டி புரட்டி பிழிந்து
கவிதை புரியும் கருமகன்!
யாரும் அவனோடு பேச
அனுமதிப்பதில்லை நான்!
பேசுவதற்கு அல்ல கிறுக்குவதர்க்கு
மட்டுமே அவன்!
பசி என்று கை கால் உதறி
கதறி அழும் குழந்தை
பாலுக்காக தான் அழுகிறது என
முகம் கனிந்து முலை எடுத்து
பாலூட்டி பசியமர்த்தும் தாயை போல
அவன் அழும் அழுகையும்
அவனது உணர்ச்சிகளும்
அவன் தாயான நான் மட்டும்
அறிந்தவை! மாற்றிங்கொருவர் அறியா.
அறிந்தாலும் புரியா!
சில பொழுதுகள் அவன் உங்களோடு
என் அனுமதியின்றி பேசியிருக்க கூடும்!
அப்போதெல்லாம் எனை பித்தன்
என்றிருப்பீர்! பெருங்கோபம் கொண்டேன் அவன்மேல்!
கிறுக்க முடிந்தால் கிறுக்கு
இல்லை இதயம் கிழிந்துவிட்டு போ!
உன் பாசை அறியா அவரிடம்
அவர் பாசை அறியா நீ பேசி என்ன பயன்!
மூடனே முடங்கி கிட என்னுள் என்றேன்!
தவமில்லாமல் நான் பெற்ற வரம் நீ!
கருத்தரிக்காமல் நான் சுமக்கும் குழந்தை நீ!
உன் மனம் நான் மட்டுமே அறிவேன்!
காகிதமும் பேனாவும் இருந்தால் கிறுக்கு
இல்லை என் உதிரம் தருகிறேன்
ஊரிலோ சுவர்கள் ஏராளம்!
என் இரத்தம் கொண்டு கவிதை நிரப்பு!
யாரேனும் ஒருவர் அறிவர் உனது தரப்பு!
-தமிழ்மணி