என்னது...? கேரளாவும் தமிழ்நாடும் வெவ்வேறு மாநிலங்களா ? கேட்கும் வடயிந்தியர்...?

இந்தியில் பல செய்தி தொலைக்காட்சிகளில் முன்னணியில் இருப்பது நீதிக்குக் குரல் கொடுப்பது என்று பரவலாக அறியப்படுவது 'ஆஜ்தக்
( இன்றுவரை )' எனும் தொலைக்காட்சி.

இன்று அதில் 'முக்கிய நூறு செய்திகள்' பார்த்தேன்.
தமிழ்நாட்டில் நீதிக்காக அறவழியின் எவ்வளவு பெரிய மாணவர் புரட்சி நடக்கிறது !?

ஆனால், அந்த நூறு செய்திகளில் ஜம்மு தாக்குதல், மணிப்பூர் குண்டுவெடிப்பு, ஐதராபாத் குண்டுவெடிப்பு, குஜராத் தேர்தல் பிரச்சாரம், மராத்தியர் மொழிப்போராட்டம், மழையால் மட்டைப் பந்தாட்டம் தடை, போப் உரை, சுவிசில் நடிகை கத்ரீனாவின் படபிடிப்பு, மூன்று சாலை விபத்துகள் என்று என்னென்னவோ வந்தது. தமிழ்நாடு என்கிற வார்த்தையாவது வந்ததா ? ம்ஹும் மூச்சுவிடவில்லை...

சரி கீழே ஓடும் ஒருவரிச் செய்தியிலாவது தமிழ்நாடு என்கிற வார்த்தை வருகிறதா ? ம்ஹும் அறவே இல்லை.

தமிழ்நாடு தாண்டி எந்த ஒரு ஊடகமும் மதிக்கவில்லை. 'இலங்கையா தமிழ்நாடா முடிவு செய்' என்ற வாசகத்தைக் கையில் ஏந்திப் போராடும் நம் மக்களை நினைத்தால்தான் வேதனை நெஞ்சைக் கீறுகிறது.

அவர்கள் என்ன புலிகளை ஆதரிக்கிறார்களா ?
இந்தியாவைக் குற்றம் சாட்டுகிறார்களா ?
பிரிவினை கோருகிறார்களா ?
வன்முறையா? கலவரமா ?

கட்சி சார்பில்லாத மாணவர்களின் அறவழிப்போராட்டம் அதுவும் எதற்காக கொடூரமாகக் கொல்லப்பட்ட இரண்டு லட்சம் மக்களுக்காகவும் ஈவிரக்கமின்றி சாகடிக்கப்பட்ட பன்னிரண்டு வயதுப் பிஞ்சுக்காகவும் நீதி கேட்டு,

இதைக்கூட ஆதரிக்காத இவர்களிடம் ஆதரவு வேண்டி கோரிக்கை வைப்பது முட்டாள்த்தனமே ஆகும்.

முக்கிய நூறு செய்திகளில் ஒரு செய்தி என்ன ஒரு வரிச் செய்தியில்கூட ஒரு கோடி மாணவர் குரலுக்கு இடமில்லை இதுதான் தமிழனுக்கு இந்தியா அளிக்கும் மரியாதை.

வடயிந்தியாவைப் பொறுத்தவரை 25 மாநிலங்களில் ஒரு மூலையில் இருப்பது தமிழ்நாடு; அது எந்தமூலை என்றுகூடத் தெரியாது.
கேரளா தமில்நாட் ரெண்டும் ஒன்றுதானே என்று கேட்பவர்கள்தான் அவர்கள்;

அவர்களுக்கு நாமெல்லாம் ' சவுத் இந்தியன் ', இந்தியை எதிர்ப்பவன், கரடுமரடான மொழியைப் பேசுபவன், ஜிலேபி எழுத்துக்கள் எழுதுபவன், கருப்பன், ஆங்கில அடிமை. மாமன் மகளையே ( அவர்கள் பார்வையில் தங்கையையே ) திருமணம் செய்பவன்,

வீட்டிலேயே கறிவெட்டி சமைப்பவன், இராசீவ் காந்தியைக் கொன்றவன்;
உடனே தென்னிந்தியர் நம்மை மதிக்கிறார்கள் என்று திராவிடவாதி போலத் தீர்மானித்துத் தொலைக்காதீர்கள் !

தென்னிந்தியனைப் பொறுத்தவரை நாம் தமிழன் அதாவது கூலி, பிழைப்புக்காக ஒடிவந்தவன், தமது மாநில நதி நீரில் பங்கு கேட்பவன், இலங்கையில் தீவிரவாதம் செய்பவன், தானே மூத்தகுடி என்று வரலாற்றைத் திரிப்பவன், அகதியாக ஓடிவந்தவன், தன்னினப் பிராமணரை வெறுப்பவன், தன்னையே ஆளத்தெரியாதவன், ஆளத்தகுதியற்றவன், நம்மிலிருந்து வந்தவன், நம்மால் ஆளப்பட்டவன்- ஆளப்படுபவன்;

இவர்களைச் சொல்லியும் தவறில்லை. வந்தேறிகளுக்கு ஆட்சியையும் வடயிந்தியருக்கு தொழிலையும் மொய் எழுதிவிட்டு பிழைப்புக்காகத் தொழிலாளியாய் ஊழியனாய் அடிமையாய் ஓடிக்கொண்டிருக்கும் ஓட்டாண்டிக் கூலிகள்தான் நாம்.

நானும் இந்தியரிடம் நமது பிரச்சனைகளைக் கொண்டு சென்றுவிட்டால் போதும் தீர்வு கிடைத்துவிடும் என்று உறுதியாக நம்பியவன்தான்;
ஆனால், இப்போது புரிந்துவிட்டது. இந்தியாவில் வாழ்வோர் அனைவரும் வெவ்வேறு தேசிய இனத்தவர் ஆவர்.

அவர்கள் நாடு அரசியல் ரீதியாக இந்திய ஒன்றியத்தில் இணைந்துள்ளது அவ்வளவே; அவர்களிடம் போய் 'இந்தியன்' என்று என்றும் இல்லாத உணர்வைத் தூண்டி அதன்மூலம் ஆதரவு திரட்ட நினைப்பது மடத்தனம்.
ஆகவே தமிழரே நம் பிரச்சனை நம் நாட்டுப் பிரச்சனை அதாவது தமிழர் நாட்டின் பிரச்சனை, இந்தியாவின் பிரச்சனை அல்ல அதாவது இந்தியா என்று எதுவும் நம்மைப் பொறுத்தவரை இல்லை;

நமது பிரச்சனையை முதலில் நாம் முழுமையாக இறங்கவேண்டும்.
தமிழர் சந்திக்கும் பிரச்சனைகளை இன்னொரு தமிழரிடம் கூறிப் புரியவையுங்கள், உலகம் முழுதும் உள்ளத் தமிழரை ஒன்று திரட்டுங்கள்; அதுதான் பலனளிக்கும்;

பிரச்சாரத்துக்காக வேண்டுமானால் பிற இனத்தவருக்கு அதுவும் தகவலாகத் தெரிவிக்கலாம். அதை விட்டுவிட்டு நம்மினம் சார்ந்த ஒரு பிரச்சனைக்கு வேறொருவரை நம்புவது முட்டாள்த்தனம்;

ஈழத்திலே
காவிய நாயகனாம்
காக்கும் கடவுளாம்
கண் கண்ட தெய்வமாம்
ஒப்பாரும் மிக்காரும் எவருமிலா
நம் தேசியத்தலைவர் திரு.பிரபாகரன் கூறுவது போல நாம் ஒரு ஆற்றல் மிக்க இனம்;

ஒரு வீரப்பனாரை தோற்கடிக்க மூன்று மாநிலக் காவல்துறையினர் மற்றும் மத்திய ரிசர்வ் படை சேர்ந்து நாற்பது வருடம் முக்கினார்கள்.

ஒரு பிரபாகரனைத் தோற்கடிக்க சிங்கள காவல்துறை, இராணுவம் , இந்திய இராணுவம்,உளவுத்துறை மற்றும் 32 நாடுகள் 30வருடம் முக்கினார்கள்;
ஒட்டு மொத்தத் தமிழனமும் எழுச்சி பெற்றால் நம்மைத் தோற்கடிக்க உலகநாடுகள் என்ன அண்ட சராசரமும் ஆயிரம் ஆண்டுகள் முக்கினாலும் நடக்காது.

நாளை நம்மீது இந்தியா போர்தொடுத்தாலும் தொடுக்குமேயன்றி நமக்கு நீதி கிடைக்க வழிவிடாது இதுதான் கசப்பான உண்மை;

அதனால் மீண்டும் கூறுகிறேன்;
தமிழராக இணையுங்கள்; தயாராக இருங்கள்;

நம் விடுதலை நம் கையில்
(மாணவர் போராட்டத்தின்போது பதிவிட்டதை மெருகேற்றி
மீள்பதிவாக) — இளஞ் சித்திரன்

தொகுத்தது
சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (22-Jul-13, 1:55 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 90

மேலே