!!!===(((வீரத்தமிழன் சூரத்தமிழன்)))===!!!

குடைமுரசு படைமுரசு
நீதிமுரசொலிக்க
வீறுகொண்டு வேங்கைத்தமிழன்
வெட்சிசூடி வருவான்;
பாரெதிரி நடுநடுங்க
களத்தில் காட்சித் தருவான்...

பறைமுழங்க பம்பைஉரும்ப
முழவும் முருடுமொலிக்க
வெம்மைகொண்ட வேழமாக
திமிரியெழுவான் தமிழன்;
எதிரிப்படையை சிதறடித்து
வீரம்செரிவான் தமிழன்...

திட்டையும் திடரியும்
வீரத்தையே கூட்டும்
திண்டியும் கரடிகையும்
களவெறியை காட்டும்
நரம்புகளும் முறுக்கேறி
வெற்றியெனவெ வெடிக்கும்...

கல்லெனவே திரண்டதோளும்
அம்புமுனையை உடைக்கும்
புடைத்துநிற்கும் புஜங்கள் ரெண்டும்
களத்தையடித்து நொருக்கும்
கங்குகளை சிந்தும்கண்ணும்
எரிமலையாய் வெடிக்கும்...

கருகருத்த முறுக்குமீசை
தமிழன் செருக்கை ஊட்டும்
கட்டுத்தறி காளையாக
கோப உணர்வுத் துடிக்கும்
தமிழனென்று சொல்லிப்பாரு
வீரம் உன்னை அணைக்கும்...

முன்னேவைத்தக் காலைத்தமிழன்
பின்னே வைப்பதில்லை
போர்க்களத்தில் புறமுதுகு
என்றுமிட்டதில்லை
சீறியெழும் சிறுத்தைகளாய்
பொங்கியெழுவான் தமிழன்...

விழித்தக்கண்ணை இமைத்தாலே
வீரத்திற்கு இழுக்கு
படைகளத்தில் பெற்றவடே
வம்சத்திற்கு அழகு - எந்த
தமிழனுக்கும் இல்லையடா
கோழையென்ற வாழ்வு...

பரணர் வியந்து பாடினானே
தழும்பன் எங்கள் தந்தை - எங்கள்
தழும்பு சொல்லும் வரலாறு
உலகம் வியக்கும் விந்தை - அந்த
தழும்பைபற்றி பேசினாலே
ஓங்குதடா எம்கை...

சீற்றம்கொண்ட புலியடக்கி
வீரம்காட்டும் தமிழன்
சிங்கப்பல்லை உடைத்தெடுத்து
தாலிசெய்வான் தமிழன்;
எட்டுத்திக்கும் முக்கொடியை
பறக்கவிட்டான் தமிழன்...

தூங்கெயிலில் பறந்து வந்து
பகைவர் தளத்தை சிதைத்தான்
முல்லைக்குத்தான் தேர்கொடுத்தே
அகிலம்போற்ற வாழ்ந்தான்
தலையைக்கூட தானம் தந்து
தமிழன் பெருமை காத்தான்...

களிறின்மீது கருணாகரன்
களத்தில் புகுந்த வேளை
செருக்களமும் செங்களமாய்
ஆனதை நீ பாரு
களமுனையில் கலிங்கப்படை
கதறியதைக் கேளு...

வாளாண்மை தாளாண்மை
வேளாண்மையும் கண்டு
இமயமுதல் குமரிவரை
ஆட்சி செய்தான் தமிழன்;
கழலணிந்து வில்லேந்தி
பகையறுப்பான் தமிழன்...

வடநாட்டு மன்னர்களை போர்களத்தில்வீழ்த்தி
இமயத்திலே வில்கொடியை
நாட்டினானேத் தமிழன்
நெடுஞ்சேரலாதனாக இருந்துவந்த இவனை
இமயவரம்பன் என்றுதானே
அழைக்கப்பட்டான் பெருமை...

ஆரியத்தின் அரசர்களின்
தலைகளையே அறுத்து
இமயத்திலே புலிக்கொடியை
பறக்கவிட்டான் வளவன்;
கரிகால்சோழன் இவனே
நாம் வணங்கும் தலைவன்....

கனக விசயனென்ற இரு
=== ஆரியத்தின் மன்னர்
தமிழரசை அசதியாடி
=== பேசியதை கேட்டு
துடித்தெழுந்த நெடுஞ்செழியன்
=== ஆரியத்தை வென்று
இமயம்வரை மீன்கொடியை
=== பறக்கவிட்டான் அன்று
இமயத்திலே கண்ணகிக்கு
=== சிலையொன்று வடித்து
கனகவிசயன் முடியிலேற்றி
=== வஞ்சிநகரம் வந்தான்...

அறுபதாயிரம் களிறுகொண்ட
=== சோழன் எங்கள் பாட்டன்
திடமான வேழம்கொண்டு
=== சேரன் எங்கள் தந்தை
கொல்களிறு படையும்கொண்ட
=== பாண்டியெங்கள் அண்ணன்;
முக்கொடியும் கட்டியாண்ட
=== மூத்தக்குடித் தமிழன்
வீரத்திற்கும் ஞானத்திற்கும்
=== வித்திட்டான் தமிழன்
தானம்செய்து தர்மம்செய்து
=== தரணிகாத்தான் தமிழன்...

தமிழனென்று சொன்னாலேத்
=== தனிப்பெருமை உண்டு
உலகடங்கும் தமிழனுடைய
=== வீரத்தினை கண்டு
தமிழன் பெருமையறியாத
=== தமிழனிங்க எதற்கு?
அடுத்தவனின் கால்பிடிக்கும்
=== அவலத்தினைபோக்கு
வாளுயர்த்தி தோளுயர்த்தி
=== வீதியிலே வந்து
உரிமைகளை மீட்பதற்கு
=== ஊதிவிடு சங்கு...!!!


------------------------(நிலாசூரியன்).

எழுதியவர் : நிலாசூரியன்.தச்சூர் (23-Jul-13, 4:39 pm)
பார்வை : 632

மேலே