உறவே நீ வேண்டா!
உணர்வுகள் எழுதும்
கவிதை - ஆசை!
உள்ளம் தொகுக்கும்
புத்தகம் - உறவு.
முதலில் மனம் வந்து சேரும்
எதுகை மோனையாய்.
முரணாய் மாறும்
சற்று புளித்த பின்.
காலத்தால் கறைப்பட்டு
நிறமாறும் நெஞ்சோடு.
நேசம் காட்டி
நிலைமாறும் உறவே!
வேண்டா! நீ வேண்டா!!
பருவம் வந்தால்
இலை உதிர்த்திடும்
மரமாய்!
சமயம் வாய்த்தால்
சருகாய்!
மனதை கருதும் உறவே!!
வேண்டா! நீ வேண்டா!!
வேடம் பல பூண்டு
வேள்வி தீயில் தள்ளி
விலகி நின்னு சிரிக்கும்
வஞ்சனை உறவே!
வேண்டா! நீ வேண்டா!!
கொஞ்சி கொஞ்சி
பாசம் ஊட்டி
கொஞ்சம் கொஞ்சமாய்
நஞ்சூட்டும் உறவே!
வேண்டா! நீ வேண்டா!!
ஊர் ஊராய் திரிந்து
உலகையே சுற்றிவரும்
' ஊராகாலி ' காற்றே!
உண்மையாய் உறவாட
யாரிருக்கா எனக்கிங்கே?
இலையோடு தென்றலாய்
விளையாடி போனபின்னே;
புயலாய் நீ வருவாய்
வேரோடு சாய்த்து எரிவாய்.
பொய்மனம் படைத்த காற்றே!
உன் உறவும் வேண்டா!!
விரும்பாத போது
வேண்டி வேண்டி செய்து
வேண்டிய போது
வெகுதுரம் விலகிபோய்
தனிமைக்கு தத்துகொடுக்கும்
தன்னலம் கொண்ட உறவே!
வேண்டா! நீ வேண்டா!!
ஊசி முள்ளாய்
உள்ளங் கிழிக்கும்
உறவுகளே! உறவுகளே!!
வேண்டா! நீ வேண்டா!!
தண்ணீர் அளவறிந்து
தாள் நீட்டும் மனமுவந்து -
தாமரை பூவே!
குளம் விட்டு வருவாயா? - என்
குலத்திற்கு உறவின் சிறப்புரைக்க.
பிழை கண்டு
பிரிந்து போனால்
பிழைப்பது இல்லை
எந்த உறவும் இம்மண்ணில்
பிணைகிறேன் என்னை
அணைக்க காத்திருக்கும் உறவோடு.
நிறம் பார்த்து
நிலை அறிந்து
நறுமனம் வீசாத மலரே!
நட்பாய் என்னோடு உறவாடு
நிம்மதியாய் நான் கண்ணுறங்க.
ஆகாய வாசிகளே!
அனுப்பி வைப்பிரோ!
அழுது புலம்பும் நெஞ்சோடு
ஆறுதலாய் நாலு வார்த்தை பேசி
நிலவு வந்து தூங்கவைக்க.
- செஞ்சிக்கோட்டை மா.மணி

