வாழும் வழி தெரியணும்

ஆலமர நிழலிலே
அழகு மிகு பூனையார்
கோலமிடும் மங்கை போல்
குனிந்து நின்று முகர்ந்தனர்
எலியின் வாடை அடிக்கவே
ஏப்பம் வேறு விட்டனர்
சலிப்பில்லாமல் ஆலம் சருகிலே
சரிந்து கண்ணை மூடினர்
சிறிது நேரம் சென்ற பின்
சின்னப் பொந்தில் இருந்து ஓர்
எலியார் எட்டிப் பார்த்தனர்
எவருமில்லை என்றெண்ணி
மெல்ல வெளியே வந்தனர்
மேவி நாலு திசையிலும்
பொல்லாப் பூனை இருப்பதை
புரிந்திடாமல் அலைந்தனர்
மின்னல் வேகப் பாய்ச்சலில்
வீரப் பூனை பாய்ந்தனர்
என்ன செய்வோம் ஐயகோ!
எலியார் பூனை வாயிலே
கண்ணை மூடிப் படுப்பினும்
கயவரோடு கவனமாய்
மண்ணில் வாழப் பழகனும்
வாழும் வழி தெரியணும்.