[459] உண்மை விடியலும் காணுமோ?

ஆளுக்கு ஆள்,தமிழ் அழகாகப் பேசியே
ஆட்சியைப் பிடித்ததும் சேதியோ? -அதை
அங்கேயே விட்டது என் நீதியோ?
கூழுக்குப் போட்டியாய்க் கும்பலைச் சேர்த்தவர்
கும்பினிப் படையினும் மேன்மையோ! -அவர்
கூட்டமும் உயர்ந்தது நன்மையோ?
தோளுக்குத் தோளுடன் சேர்த்தவர் இன்னுமே
தோழராய்க் கூச்சலில் மாயவோ? -அவர்
தொடர்ந்துமே தொண்டராய்ச் சாயவோ?
நாளைக்குப் பிறக்கினும் நம்தலை வர்களின்
நம்பிகள் தாம்தலை தூக்கவோ? -பிறர்
நல்லதென் றே,யதை ஊக்கவோ?
எலிகள் புசிக்கவே எல்லாமும் கொடுத்தே
-ஏறுகள் ஏங்குதல் தொடரவோ? -அதில்
இன்னுமே கண்ணியம் படரவோ?
புலிகளை எழுப்பியே போரிட வந்தவர்
-பூனையாய் அவற்றினை மாற்றவோ?- அதைப்
பூசனை செய்துநாம் ஏற்கவோ?
மலிவுச் சரக்கினில் மயங்கியே இன்னுமெம்
மறவர் படையுமே தூங்கவோ? -இதை
மாற்றிடும் தேர்தலுக் கேங்கவோ?
ஒலியைக் கடலலை ஓங்கியே எழுப்பிட
உடைந்திடு மோ,கரை தானுமே! -இந்த
உண்மையும் விடியலாய்க் காணுமோ?
---- ----