இளவரசனின் இறுதி நினைவுகளில் .........

காயம் பட்ட நெஞ்சுக்குள்
கணநேர ஓய்வின்றி
கணறும் ஆர்பரிப்புகள் .

என் கண்கள் வழியே
என்னை பார்க்கையில் எழும்
கூச்சங்கள் கூறி நிற்கிறது
மனம் தொலைத்ததே
ஒரு மடத்தனம் என்று .

இனி நினைவுகளில் மட்டுமே
நீ என்பது
கனவுகளும் ஏற்கா கற்பனையானதால்
இதயத்திற்கான சமாதானங்களாய்
இனி எதனை சொல்ல ?

என் கன்னம் தாண்டி குதித்தோடும்
கண்ணீரில் தேடிப்பார்
கரைந்தும் கரையாமல் மிதக்கிறது
என் காதலின் மிச்சங்கள் .

வெப்பம் சுருக்கிய உதடுகள் போல்
உள்ளம் உருக உயிர் சுருங்கும்
என் இறுதிக்கான நேரங்களிலும்
எரிதழல் வார்த்தைகளால்
உள்ளம் கொன்ற உன்னையே
காயம் படவே காத்திருக்கும்
என் நெஞ்சு
சுற்றிவரும் வினோதங்கள்
எடுத்துரைக்க இயலாதவை .

நீயன்றி போனதால்
என் தனிப்பட்ட தீர்வுகளாகவும்
என் தேடலின் முடிவாகவும்
மரணம் .

பிரிந்து வானுலகம் பறக்கும்
என் ஆவியின் கண்கள் கூட
மேகங்கள் விலக்கி
உன் முகம் பார்த்தபடியே
மறுமையிலும் உழலும் என்பதை நீ
மறவாதே கண்மணியே !

எழுதியவர் : திகம்பரன் (3-Aug-13, 12:22 pm)
பார்வை : 124

மேலே