வெல்வேன் இந்த உலகை !!!

ரகசியமாய் என் மனதை
ரணப்படுத்திய பல
தோல்விகளும் சில
அவமானங்களும்
நான் பெற்ற விருதுகள்
நாளைய வெற்றியின் உரங்கள்.

சில அவமானங்கள்
அரங்கேறாமல் நான்
சொன்ன சின்னச்சின்ன
காரணங்களுக்கு
எனை “ பொய்யன் “
என்றார்கள்.

பல தோல்விகளை
என் தோள் மீது
சுமந்து சுமந்து
நான் துவண்டபோது
எனை ”உருப்படாதவன்”
என்றார்கள்.

நான் சிகரம் தொட
நீங்கள் கரம் தர வேண்டாம்
கரம் நீட்டி வசை பாடாமல்
உதவுங்கள் உறவுகளே !

என் வெற்றி பயணத்திற்கு
நீங்கள் புறங்கொடுக்க வேண்டாம்
புறங்கூறாமல் புத்துணர்வு
தாருங்கள் தோழர்களே !!

தோல்விகள் கூட்டம் கூடி
கூத்தடித்தால் தான் –நாளை
வெற்றி தேவதை என்னோடு
கும்மாளமிடுவாள் என
நான் அறிவேன்.

இன்பம் துன்பம்
விகிதத்தை வகுப்பெடுக்குமாம்
சுயமுயற்சி !

தலையெழுத்தை நிர்ணயிப்பது
கை ரேகையல்ல
தன்னம்பிக்கை ! என
அறிந்த அறிஞன்
நான் !!
---- ரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : ரா.சந்தோஷ் குமார். (8-Aug-13, 8:30 pm)
பார்வை : 285

மேலே