மனசாட்சி பேசினால் ..........
மனசாட்சி .
நம்மை நோக்கிய சுட்டு விரல் .
நம் நியாயங்களின் காதலி .
நம் தவறுகளின் வெள்ளை அறிக்கை .
நமக்குள் வாழும் இறைவன் .
நடத்தைகளின் விமர்சன மன்றம் .
மூப்பு எய்தா குழந்தை.
கேட்போர்க்கு
சாணக்கிய நீதியாய் கட்டளை இடும் .
கேளாதோர்க்கு
விதுர நீதியாய்
கருத்துச் சொல்லிவிட்டு மௌனமாகும் .
நினைவு புழுக்கத்தில் மிஞ்சும்
வருத்தங்களும் வலிகளுமே
மனசாட்சி தரும் அதிகபட்ச தண்டனைகள் .
புனலின்பம் அள்ளி பூசிக்கொண்ட
மனிதர் தம் மனசாட்சி
பேசத் தொடங்கினால்
எரிமலையின் தழல்களாய்
கேள்விகள் வந்து விழுகிறது .
என் தனிமைகளை
தத்தெடுத்துக்கொள்ளும்
என் மனசாட்சியின் கேள்விகளால்
கட்டம் கட்டப்படும்போது
மூளை குற்றவாளியாக்கப்படுகிறது .
இனமான தமிழன்
பிணமான நேரங்களில்
செயல் மறந்த என்னை
"ஆணா ?" எனக்கேட்டு
அலறியது என் மனசாட்சி .
துக்க வீட்டில் சரிந்து கிடக்கும்
எல்லாப் பிணங்களிலும்
என் ஈழமக்களின் முகம் காட்டி
"உன் மௌனத்தின் பரிசு " இதுவெனக்கூறி
என் முகம் தொலைக்கிறது மனசாட்சி .
பார்த்துச் சிரிக்கும்
குழந்தையின் முகம் கூட
கண்டு ரசிக்க இயலாது
கால ஓட்டத்தில் கலந்து விட்ட என்னை
மீட்டெடுக்க முயன்று
தோற்றுப் போன என் மனசாட்சி
இவன்
நிஜங்களால் நிந்திக்கப்பட்ட
ஆன்மக்குருடன் என
அறுதியிட்டு கூறுகிறது .
உண்மை உரைப்பதெனில்
'சரி ' களில் கிளம்பி
'தவறு ' கடந்து
'நியாயங்களில் ' கூட
நிற்காமல் போய்விட்ட
தற்கால வாழ்வின் ஆதிக்க ஓசையில்
உயிரிழந்துவிட்டது மனசாட்சி .