அடிதடியும் ஏதுக்கடா

அடிதடியும் ஏதுக்கடா?
01 / 01 / 2025

ஆண்டவன் யாரென்று யாருக்கும் தெரியல
ஒருவன்தான் அவனென்றால் யாருக்கும் புரியல
அல்லாவும் ஏசுவும் ஒன்றென்றால் எதுவும் இங்கு விளங்கல
அரியும் சிவனும் இரண்டல்ல அதுவும் ஒன்றும் புரியல

ஊரெல்லாம் தேடுக்கின்றாய் எங்கேயும் இல்லையடா
உனக்குள்ளே உன்னைத்தேடு உண்மையெல்லாம் விளங்குமடா
காசுபணம் கொட்டினாலும் கிடைக்கமாட்டான் தெரிஞ்சுக்கடா
நேசத்தோடு வாழ்ந்துவிடு பிரியமாட்டான் உன்னையடா

இறைவனை நம்பினால் அவனை மனதார வணங்கிடடா
இயற்கையை நம்பினால் அதனை உயிராகப் போற்றிடடா
இயற்கையோ இறைவனோ இரண்டுமே ஒன்றுதானடா
உன்மனதின்படி விரும்பிநீயும் பின்பற்றி வாழ்ந்திடடா

சொர்க்கம் நரகம் என்பதெல்லாம் மேலும்கீழும் இல்லையடா
வர்க்கபேதம் பார்க்காமல் வாழ்வதில்தான் இருக்குதடா
மனிதனை மனிதனாய் மதிப்பதில்தான் தெய்வீகம் இருக்குதடா
மனிதநேயம் இல்லையென்றால் எல்லாமே போலியடா

மனதை நீயும் அடக்கியே அகங்கார பேயை ஓட்டிடடா
நானெனும் அகம்பாவம் தலைக்கேறாது பார்த்துக்கடா
மனதை நீயும் அடக்கிவிட்டால் இத்தனை மதங்கள் எதுக்குடா?
மதங்களுக்குள் மதமேறி இங்கு அடிதடியும் ஏதுக்கடா?

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (1-Jan-25, 7:42 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 16

மேலே