அவன் தேடும் எனது !
அவன் வீசியெறிந்த
சஞ்சலக் கற்குவியலின் அடியில்
நசுங்கித் தவிக்கிறேன்
கண்ணிழந்த புழுவாக
அவன் விட்டெறிந்த
பாதாள சொருகியைத் தவிர்த்து
நண்டுகள் சூழ்ந்த பொந்திற்குள்
சிக்கித் தவிக்கின்றன
சிந்தனைகள்
வெளியேறாத் தவளைகளாக
என்னை
கொடியாய் பறக்க விடுகையில்
என் மனம் பூக்களாய் உதிரும்
காலங்களில்
தன்னைத்தானே
கட்டிக் கொள்கிறான்
இறுக்கத்தின் வேதனைகளில்
ஆழ்கடலில் இருந்து
இன்னும் எவ்வளவு தொலைவு
மேல் எழும்ப வேண்டுமென்று
யோசிக்காத நிலையில்
கரை சேர்வேன்
என்ற நம்பிக்கையில்
கை நீட்டியபடியே காத்திருக்கிறான்
தனது இருப்பை மறந்து
இருளில் மறைந்து
தொலைந்து கொண்டிருக்கும்
வெளிச்சத்தைப் பரப்பக்
காத்திருக்கும்
பெருஞ்சுடராகவும்
எங்கோ சிதைந்து
தத்தளித்துக் கொண்டிருக்கும்
கட்டு மரம் என்னைக்
கண்டுணரும் துடிப்புடன்
காத்திருக்கும்
கலங்கரை விளக்காகவும்
மனதில் பதுக்கிய
மலர்த் தோட்டங்களுடனும்
உழன்று கொண்டிருக்கிறான்
என் நண்பன்.,
எப்படியோ
நான் அவனுக்குள் இருக்கிறேன்
என்ற ஒரே காரணத்திற்காக !