சிறுவயதுப் பேருந்துப் பயணம்

அகவை
எனக்கு
ஆறிருக்கும்...
ஆர்ப்பாட்டம்
கொஞ்சம்
அதிகமிருக்கும்...
ஒரு வருட
காத்திருப்பு
முடிந்த நாளது...
இறுதித்தேர்வு
இறுதியடைந்த
பொன்னாளது...
"தாத்தாவைப் பார்ப்பது எப்போது?"
என்ற ஆவல்
முத்திப்போன நாளது...
தீபாவளிப் பட்டாசு
வாங்கச்சென்றிருந்த போதிலும்
தந்தையைத் தேடியதில்லை...
அன்றிரவுக்கான பயணச்சீட்டு வாங்க
சென்றிருந்த அவரை ,
வாசலிலேயே நெடுநேரம் நின்று
தேடிய நாளது....
பதிவுச்சீட்டைத்
தந்தைக் காட்டியதும்
அவர் முதுகில்
ஏறிய அழகான நாளது...
அக்கம்பக்கம்
அனைவரிடமும்
மதுரைச் செல்கிறேன்
என்று அலறிய நாளது...
ஒருமாதப் பிரிவு
என்பதைச் சற்றிலும் அறியாது
நண்பர்களிடம் ஆரவாரத்துடன்
விடைப்பெற்ற நாளது...
சென்னைப் பாரிமுனையில்
கிளம்பிய திருவள்ளுவர், எண் "137"
பேருந்து அது...
அண்ணனிடம்
அன்புச்சண்டையிட்டு
அபகரித்த
சன்னல் இருக்கை அது.
வாடைக்காற்று
ஒத்துக்கொள்ளாது என்று
என் அன்னை
அன்பாய்
சன்னல் கதவை
மூடிய நாளது.
எங்கேயோ
இடைவெளிக்காக
பேருந்து,
நிறுத்தத்தில்
நின்ற நாளது...
தேநீருக்காக
இறங்கிய
தேன் நாளது...
என்னவென்று
தெரியாமல் போனாலும்
அங்கே ஒலித்த
இசையை ரசித்த நாளது...
நடத்துநரின் ஊதல்
சத்தம் கேட்டு
பேருந்துக்குள்
உட்புகுந்த நாளது...
விடியல் பிறந்தது..
விடுகதையுடன் எழுந்தேன்...
இருக்கையில் இருந்தவன்
பேருந்துத் தரையில் எப்படி வந்தேன் என்று...
அண்ணனோ?? எனச்செல்லக் கோபம் வேறு !!!
என்னைக்கண்டதும்
மரங்கள்
பின்னோக்கி ஓடுவதாய்
நான் மமதைக் கொண்ட நாளது...
ஏதேனும் வண்டியை
பேருந்து முந்திச்செல்லும் போது,
டாட்டா காட்டி
அவர்களுக்கு
"அழவை"க் காட்டிய நாளது...
முந்திச்செல்ல முடியாதபோது,
முன்னிருக்கையை
பேருந்தின் திசைமாற்றியாய் எண்ணி
நானே
முடுக்கு விசை கொடுத்து முந்த
முயன்ற நாளது...
ஏதோ ஒரு நிறுத்தத்தில்
யாரோ ஒரு வியாபாரி
"மணப்பாறை முறுக்கே!!! மணப்பாறை முறுக்கே!!!"
என்று கூவிய நினைவை
இன்றளவும் தந்த பெரும் நாளது...
நெடுவென நிற்கும்
உயர மலைகளின்
உச்சியில்
வர்த்தக வாசகங்களை
எப்படி எழுதினார்கள்
என்று வியந்த நாளது....
மதுரை வந்தது...
பெருந்தேர்ப்போல
பெரியார் பேருந்து நிலையம்
சென்றது பேருந்து...
பயணம் முடிந்தது...
பசி வயிற்றைக் கிழித்தது...
அப்பா வாங்கித்தந்த
பனியாரம்
பல்துலக்காமல் போனாலும்
அது நாக்கிற்குத் தித்திப்பு தந்தது...
இன்றளவும் அது
இதயத்திற்கு
இதம்
சேர்க்கிறது...
ஒரு மாதம் தாத்தாவுடன் இருந்தாயிற்று...
வீடு திரும்பியாயிற்று...
தொடர்ந்து சில கோடை
விடுமுறைகள்
இதே போல்
சென்றாயிற்று...
1997ம் ஆண்டு
தத்தா
திடீர் மரணம்...
தாத்தாவின்
மரணத்தோடு,
மனதில்
மட்டுமே
நிலைத்துப்போனது...
சிறுவயதில் நான்கண்ட சொர்க்கபூமி....